Last Updated : 18 Jun, 2024 08:39 PM

 

Published : 18 Jun 2024 08:39 PM
Last Updated : 18 Jun 2024 08:39 PM

மானிய கோரிக்கை விவாதத்துக்காக சட்டப்பேரவை வியாழக்கிழமை மீண்டும் கூடுகிறது

சென்னை: துறைகள் தோறும் நிதி ஒதுக்கத்துக்கான மானிய கோரிக்கை விவாதத்துக்காக, தமிழக சட்டப்பேரவை நாளை மறுதினம் ஜூன் 20-ம் தேதி மீண்டும் கூடுகிறது.

சட்டப்பேரவையில் அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபின், துறைகள் தோறும் மானிய கோரிக்கை தொடர்பான விவாதம் நடத்தப்பட்டு, இறுதியில் சம்பந்தப்பட்ட துறைகளின் திட்டங்களுக்கு கோரப்பட்ட நிதி பேரவையின் ஒப்புதலுடன் விடுவிக்கப்படுவது மரபாகும். முன்னதாக, தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டமானது இந்தாண்டு, மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டு, பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. உரையின் மீது 15-ம் தேதி வரை விவாதம் நடைபெற்று, அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு தனது பதிலுரையை அளித்தார்.

அதைத்தொடர்ந்து, பிப்.19ம் தேதி தமிழக அரசின் இந்த 2024-25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொடர்ந்து பிப்.20-ம் தேதி தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் தாக்கல் செய்தனர். தொடர்ந்து, நிதி நிலை அறிக்கைகள் மீதான விவாதம் கடந்த பிப்.22-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அன்று இரு அமைச்சர்களும் பதிலுரை அளித்ததும், பேரவை அடுத்ததாக கூடும் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, துறைகள் தோறும் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்பட வேண்டிய நிலையில், மக்களவை தேர்தல் அறிவிப்பை எதிர்நோக்கி தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது தேர்தல் நடைமுறைகள் முடிந்துள்ளதால், வரும் ஜூன் 20-ம் தேதி அதாவது நாளை மறுதினம் மானிய கோரிக்கை விவாதங்களுக்காக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது. தற்போது விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், 9 நாட்கள் காலை, மாலை என பேரவைக்கூட்டம் நடத்தப்பட்டு, அனைத்து துறைகளுக்குமான நிதி ஒதுக்கப்படுகிறது.இந்த சட்டப்பேரவை கூட்டத்தை பொறுத்தவரை, தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் வெற்றி பெற்ற உத்வேகத்தில் ஆளுங்கட்சி உள்ளது. இதனால், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் விரிவாக்கம், புதிய திட்டம் தொடர்பான அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகள் விரிவாக்கம் உள்ளிட்டவற்றுக்கான அறிவிப்புகள் வரும் என தெரிகிறது.இதுதவிர, ஜூலை 1 முதல் மின்கட்டணம் உயர்த்தப்படலாம் என்ற தகவல்கள் பரவி வரும் சூழலில், மின் கட்டணம் தொடர்பான அறிவிப்புகள் சட்டப்பேரவையில் வெளியாகும் என தெரிகிறது. அதே நேரம், மின் கட்டண விவகாரம், போதைப்பொருள் உள்ளிட்ட விவகாரங்களை விவாதிக்க எதிர்க்கட்சி தரப்பும் வலியுறுத்தும் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x