Last Updated : 18 Jun, 2024 08:20 PM

 

Published : 18 Jun 2024 08:20 PM
Last Updated : 18 Jun 2024 08:20 PM

தென்மேற்கு பருவமழை: தமிழகத்தில் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு அறிவுறுத்தல்

இடம்: அம்பத்தூர் | படம்:எம்.வேதன்

சென்னை: தென்மேற்கு பருவமழையால் ஏற்பாடும் நோய்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: “தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தொற்று நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதன்படி, மாவட்ட அளவில் சுகாதாரக் கட்டமைப்பை ஆயத்த நிலையில் வைத்திருப்பது அவசியம் ஆகும். மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடையில்லா மின் வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மழை நீர் மற்றும் கழிவு நீர் வடிகால் கட்டமைப்புகள் சீராக இருப்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். மருத்துவமனை வளாகங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தி இருத்தல், குடிநீர் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்தல், போதிய அளவு குளோரின் கலந்து விநியோகப்பதும் முக்கியம் ஆகும். ஒவ்வொரு சுகாதார மாவட்டம் மற்றும் வட்டாரங்களில் புயல் மற்றும் கன மழைக்கு முன்பாகவே விரைவு சிகிச்சைக் குழுக்களை செயல்படும் வகையில் அமைக்க வேண்டும்.

அதேபோல், கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு குழுக்களையும் அமைத்து, மருத்துவக் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும் கண்காணித்து உறுதி செய்தல் அவசியம் ஆகும். கொசுக்கள் உற்பத்தியை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை விரிவாக மேற்கொள்ள வேண்டும். பருவ மழைக்குப் பிறகு ஏற்படும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை மற்றும் நோய்த் தொற்றுகள் குறித்த விவரங்களை பொது சுகாதாரத் துறைக்கு அனுப்ப வேண்டும்.

காய்ச்சல் பாதிப்புகள் அதிகமுள்ள இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்துவதுடன், தேவைப்படும் இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அனுப்பலாம். பருவ கால தொற்றுகளை உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x