Last Updated : 18 Jun, 2024 05:45 PM

30  

Published : 18 Jun 2024 05:45 PM
Last Updated : 18 Jun 2024 05:45 PM

தமிழகத்தில் பள்ளி பெயர்களில் சாதிய அடையாளம் நீக்குதல், வண்ணக் கயிறுக்கு தடை - ஒருநபர் குழு பரிந்துரைகள்

மாணவர்களிடம் சாதிய வன்முறைகளை தவிர்பதற்கான ஒருநபர் குழு அறிக்கையை ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார்.

சென்னை: மாணவர்களிடம் சாதிய வன்முறைகளை தவிர்ப்பதற்கான ஒரு நபர் குழு அறிக்கையை ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு, தமிழக அரசிடம் இன்று (ஜூன் 18) சமர்ப்பித்தார். பள்ளி பெயர்களில் சாதிய அடையாளம் நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்திடவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு தமிழக அரசால் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. அந்தவகையில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தனது பரிந்துரை அறிக்கையை தயார் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை சமர்பித்தார்.

அப்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, பள்ளிக் கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன், இயக்குநர் க.அறிவொளி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்நிலையில், ஒரு நபர் குழு சமர்ப்பித்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய பரிந்துரைகளின் விவரம் வருமாறு:

  • பள்ளி பெயர்களில் இருக்கும் கள்ளர் மீட்பு, ஆதிதிராவிடர் நலன் போன்ற பெயர்களை நீக்கி அரசுப் பள்ளிகள் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும்.
  • கள்ளர் மீட்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகையான பள்ளிகளையும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரும் முடிவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
  • புதிதாக தொடங்கப்படும் பள்ளியின் பெயரிலும் சாதி பெயர் இடம்பெறாதவாறு நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும்.
  • உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களை அவ்வப்போது இடமாற்றம் செய்ய வேண்டும்.
  • முதன்மை, மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் போன்ற முக்கிய பொறுப்புகளில் அந்தப் பகுதிகளின் பெரும்பான்மை சாதியை சேர்ந்தவர்களை பணியமர்த்தக்கூடாது.
  • ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களை நியமிக்கும் போது சமூக நீதி பிரச்சினைகளின் மீதான அவர்களின் அணுகுமுறையை கண்டறிந்து பணிக்கு அதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பள்ளிப் பாடத்திட்டத்தில் சமூக நீதி, சமத்துவம், சாதி அடிப்படையிலான பாகுபாடு இல்லாத தலைப்புகளை சேர்ப்பது உட்பட பொருத்தமான மாற்றங்களை பரிந்துரைக்க சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்களை கொண்ட சமூக நீதி கண்காணிப்பு குழுவை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நியமிக்க வேண்டும்.
  • அனைத்து பள்ளி, கல்லூரி வகுப்பறைகளிலும் மாணவர்களின் இருக்கை அகரவரிசைப்படி இருக்க வேண்டும். இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மட்டும் முன்வரிசையில் அமர இடமளிக்க வேண்டும்.
  • மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் சாதி தொடர்பான விவரங்கள் இருக்கக்கூடாது.
  • எந்தச் சூழலிலும் ஆசிரியர்கள் மாணவர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சாதியை குறிப்பிட்டு கருத்துகளை கூறக்கூடாது.

> மாணவர்கள் உதவித்தொகை பெறும் விவரங்களை தலைமை ஆசிரியர்கள் அறைக்கு அழைத்து வழங்கப்பட வேண்டும். இந்த உத்தரவுகளை மீறும் ஆசிரியர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறுகள், மோதிரங்கள் அணிவதையும், நெற்றியில் திலகம் இடுவதையும் தடை செய்ய வேண்டும்.
  • சாதியை குறிக்கும் வகையில் வண்ணம் பூசப்பட்ட சைக்கிள்களில் வருவதையும், சாதி தொடர்பான உணர்வுகளை வெளிப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். இதற்கு இணங்க தவறினால், மாணவரின் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவேண்டும்.
  • பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர் சங்கம் அமைக்க வேண்டும். அதற்கான தேர்தல்களில் அனைத்து மாணவர்களையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.
  • வளாகத்தில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை பள்ளிக்கல்வித் துறை தடை செய்தது சரியானது. இந்த உத்தரவை பள்ளிகளுக்கு மட்டுமில்லாமல் அனைத்து விதமான கல்வி நிறுவனங்களிலும் அமல்படுத்த வேண்டும்.
  • பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையான வகுப்புகளுக்கு அறநெறி கற்பிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
  • மாணவர் போதைப் பழக்கத்துக்கு ஆளாகியிருந்தால் அவரை அரசு செலவில் போதை ஒழிப்பு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
  • முக்கியமாக 500 மாணவர்களுக்கு மேல் படிக்கும் மேல்நிலைப் பள்ளிகளில் மாநில அரசு பள்ளி நல அலுவலர் பதவியை உருவாக்க வேண்டும். இந்த அலுவலர்கள் ராகிங், போதைப்பொருள் அச்சுறுத்தல், பாலியல் வன்கொடுமை, சாதிய பாகுபாடு தொடர்பான குற்றங்களை கண்காணித்து உரிய பிரச்சினைகளுக்கு சட்டத்துக்கு உட்பட்டு தீர்வு காணவேண்டும்.
  • பள்ளிகளில் மாணவர் மனசு உட்பட புகார் பெட்டிகளையும் அவர்கள் கண்காணிக்க வேண்டும்.
  • அதேபோல் சமூக நீதி மாணவர் மன்றத்தை அமைக்க வேண்டும். அந்த மன்றத்தில் அனைத்து சமூகங்களின் மாணவர்கள் இருப்பது அவசியமாகும் என்பன உட்பட பல்வேறு பரிந்துரைகள் அதில் இடம் பெற்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x