Published : 18 Jun 2024 04:26 PM
Last Updated : 18 Jun 2024 04:26 PM

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற தூய்மைப் பணியாளரின் மகளுக்கு நகராட்சி ஆணையர் பதவி @ மன்னார்குடி

மன்னார்குடியில் நடைபெற்ற பாராட்டு விழாவில், குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று நகராட்சி ஆணையராக தேர்வு பெற்றுள்ள துர்காவுக்கு வாழ்த்து தெரிவித்த சிஐடியு தொழிற்சங்கத்தினர். 

திருவாரூர்: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மன்னார்குடி நகராட்சி தூய்மைப் பணியாளரின் மகளுக்கு நகராட்சி ஆணையர் பதவி கிடைத்துள்ளது. அவருக்கு மன்னார்குடியில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றியவர் எஸ்.சேகர். கடந்த 6 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இவரது மகள் துர்கா(30). குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்ற இவருக்கு நகராட்சி ஆணையர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிஐடியு திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் மற்றும் என்.எம்.ஆர் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் துர்காவுக்கு மன்னார்குடியில் நேற்று முன்தினம் பாராட்டு விழா நடைபெற்றது. சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கோ.ரகுபதி, செயலாளர் டி.முருகையன், துணைச் செயலாளர் கே.பி.ஜோதிபாசு உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

அப்போது துர்கா பேசியது: அரசு அதிகாரியாக வேண்டும் என்ற எனது பெற்றோரின் கனவு எனது முயற்சியால் நிறைவேற்றியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது இந்த முயற்சிக்கு எனது கணவர் நிர்மல் முழு ஒத்துழைப்பு அளித்தார். எந்த ஒரு குடும்பப் பின்னணியும், பொருளாதார பின்னணியும் இல்லாத நான், இன்றைய தினம் அதிகாரியாக உயர்வு பெற்றுள்ளதற்கு காரணம் கல்வி தான். இதை பெண்கள் அனைவருக்கும், கஷ்டப்படுகின்ற ஒவ்வொருவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x