Published : 18 Jun 2024 04:20 PM
Last Updated : 18 Jun 2024 04:20 PM
தஞ்சாவூர்: “தனியார் மருத்துவமனைக்கு நிகராக, அரசு மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும்,” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே ஒரத்தூரில் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூன் 18) திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் அவசர சிகிச்சை மையம் அமைப்பதற்காக 2017 -ம் ஆண்டில் ரூ.4.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த மையம் பல்வேறு காரணங்களால் அமைக்கப்படவில்லை. இதற்கான புதிய இடம் திருக்கானூர்பட்டியில் இன்று தேர்வு செய்யப்பட்டது. இதற்கான திட்டம் தயார் செய்யப்பட்டு, ஓராண்டுக்குள் இம்மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 45 கோடியில் கட்டப்பட்டு வரும் மருத்துவச் சிகிச்சை கட்டிடம் 2025 டிசம்பர் மாதத்துக்குள் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேலும், ரூ. 24 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் 5 மாதங்களில் முடிக்கப்பட்டு திறக்கப்படும்.
தனியார் மருத்துவமனையில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்த செயற்கை கருத்தரித்தல் மையம் இனி அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. இப்போது சென்னை அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு பிற மாவட்டங்களில் தொடங்கப்படும்.சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மையம் போன்று தஞ்சாவூரிலும் குழந்தைகள் மருத்துவ மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களில் 984 பேர் 15 நாட்களில் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், 2 ஆயிரத்து 553 மருத்துவர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் இதுவரை 2.56 லட்சம் பேருக்கு ரூ. 221.11 கோடி செலவிடப்பட்டு, உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது, என்று அவர் கூறினார்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், மக்களவை உறுப்பினர் ச.முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், கா.அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT