Published : 18 Jun 2024 03:30 PM
Last Updated : 18 Jun 2024 03:30 PM

“அதிமுக அல்ல பாஜகவே நம் எதிரி” - விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

அமைச்சர் எ.வ.வேலு | கோப்புப்படம்

விழுப்புரம்: “இந்த இடைத்தேர்தலில் அதிமுக நிற்கவில்லை. அதிமுக அல்ல நமக்கு எதிரி. இந்த தேர்தலைப் பொறுத்தவரை, மோடி தலைமையில் இருக்கிற கூட்டணிதான் நமக்கு எதிரி. பாஜக என்பது ஒரு பாசிச சக்தி. தமிழகத்தில் பாஜகவை வளரவிட்டால் இந்த சமுதாயமே கெட்டுபோய் விடும்” என்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “இங்கு அதிமுக நிற்கவில்லை. அவர்கள் ஏன் நிற்கவில்லை, என்பதையெல்லாம் பிற்காலத்தில் நாங்கள் கூறுகிறோம். இந்த இடைத்தேர்தலில் அதிமுக நிற்கவில்லை. அதிமுக அல்ல நமக்கு எதிரி. இந்த தேர்தலைப் பொறுத்தவரை, மோடி தலைமையில் இருக்கிற கூட்டணிதான் நமக்கு எதிரி. பாஜக என்பது ஒரு பாசிச சக்தி. தமிழகத்தில் புல், பூண்டு கூட விளையலாம். ஆனால், பாஜகவை விளையவிட்டால், இந்த சமுதாயமே கெட்டுபோய் விடும். அப்படிப்பட்ட, பாஜக கூட்டணியின் வேட்பாளராகத்தான், பாமக வேட்பாளர் இந்த இடைத் தேர்தலில் இங்கு போட்டியிடுகிறார்.

அதேபோல், நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இவர்கள்தான் நமது கண்ணுக்குத் தெரிந்த எதிரிகள். அதிமுக இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே, அவர்களைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. எனவே, நமது திண்ணைப் பிரச்சாரமானது, நமது ஆட்சியின் சாதனைகளைப் பற்றியும், எதிர்க்கட்சி வேட்பாளர்களின் தரத்தைப் பற்றியதுமாக இருக்க வேண்டும்.

ஆன்மிகத்தையும், திராவிடத்தையும் பிரித்து இந்த ஆட்சியில் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு ஆட்சி இன்றைக்கு தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் 5 முறை தாண்டியும், தமிழகத்தை முதல்வர் ஸ்டாலின்தான் ஆட்சி செய்வார். வாய்ப்பு இல்லை என்று சொன்னால், திராவிட இயக்கம் என்று கூறிக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சி செய்துவிட்டு போகட்டும். ஆனால், மற்ற எந்தக் கட்சியும் தமிழகத்துக்கு ஒத்துவராது, என்று ஏற்கெனவே நான் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியிருக்கிறேன். எனவே, அதனை மனதில் வைத்துக் கொண்டு தொண்டர்கள் தேர்தல் பணியை ஆற்ற வேண்டும்” என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x