Published : 18 Jun 2024 12:00 PM
Last Updated : 18 Jun 2024 12:00 PM

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: ஜூலை 22-க்கு விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து மறு ஆய்வுக்காக விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை ஜூலை 22-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

கடந்த 1996-2001-ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ரூ. 1 கோடியே 36 லட்சம் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக, 2002ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, வேலூருக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து மறு ஆய்வு செய்யும் வகையில் வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஏற்கெனவே அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமசந்திரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீதான வழக்குகள் இறுதி விசாரணை நடந்து வருவதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கின் விசாரணையை ஜூலை 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதேபோல 2001- 06 ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதற்கு எதிராகவும் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 2 வது வாரத்துக்கு தள்ளி வைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x