Published : 18 Jun 2024 08:19 AM
Last Updated : 18 Jun 2024 08:19 AM
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி உறுதியாகி உள்ளது. கடந்த 15-ம் தேதி முற்பகல் பாமக தங்கள் கட்சி வேட்பாளரை அறிவித்த பின் அன்று மாலை அதிமுக இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவும் இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
புறக்கணிப்பதற்கான காரணத்தை அக்கட்சிகள் விளக்கமாக தெரிவித்து இருந்தாலும், இதன் பின்னணி என்ன என விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக மற்றும் திமுக கூட்டணிக்கட்சி நிர்வாகி களிடம் பேசியபோது அவர்கள் தெரிவித்தது:
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட விரும்பியது. கட்சியின் மாநிலத் துணைத் தலைவரான முன்னாள் எம்எல்ஏ ஏ.ஜி.சம்பத்தை இதற்காக தேர்வு செய்து வைத்திருந்தது. மாநில கட்சியின் அந்தஸ்தை இழக்கும் நிலையில் உள்ள பாமக, இத்தேர்தலில் வென்றாக வேண்டிய கட்டாயத்தை தெளிவுபடுத்திய பின்பு, “பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
முன்னதாக பாமக தலைமை, வேட்பாளரை தீர்மானிக்க தங்கள் கட்சியின் நிர்வாகக்குழு கூட்டத்தை கூட்டி விவாதித்த போது “சௌமியா அன்புமணி முன்னிறுத்தப்பட்டார். ஆனால் அவர் இத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை. அடுத்து முன்னாள் மாவட்ட செயலாளர் புகழேந்தியை பாமக தேர்வு செய்தது. இத்தகவலை பாமகவே மீடியா மூலம் கசிய விட்டது.
கடந்த காலங்களில் அதிமுக - பாமக கூட்டணிக்கு அடித்தளமாக இருந்து சி.வி.சண்முகத்தையும், ராமதாஸையும் நேரில் சந்தித்து பேச பாலமாக இருந்தவர் புகழேந்தி. இவர் சி.வி.சண்முகத்தின் உறவினர். ஏற்கெனவே தொடர் தோல்வியில் விமர்சனத்திற்கு உள்ளான அதிமுக, இத்தேர்தலில் பாமகவை எதிர்த்து போட்டியிட்டாலும், திமுகவை விட பாமகவை எதிரி கட்சியாக பார்க்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை உணர்ந்தது.
இந்தச் சூழலில் கடைசி கட்டத்தில் பாமக வேட்பாளராக சி.அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டபோது, இவரை விக்கிரவாண்டி தொகுதியில் நிறுத்தியது. அப்போது இவர் 41,428 வாக்குகள் பெற்றதால் அவருக்கே வாய்ப்பளிக்கப்பட்டது.
இந்த காரணங்களையெல்லாம் தாண்டி, இந்த இடைத்தேர்தலை விட 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல்தான் அதிமுகவின் இலக்கு. மதுரையில் இரு தினங்களுக்கு முன் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி, “2026-ல் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் அதிமுக கூட்டணியில் இணைய பாஜக, பாமகவுக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார் என்றுதான் கருத முடிகிறது.
அதனால்தான் தற்போது பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவுக்கு எதிராக களமிறங்காமலும், சி.வி.சண்முகம் - அன்புமணி ராமதாஸ் முட்டல் மோதல்களை தவிர்க்கும் விதமாகவும் அதிமுக போட்டியிடாமல் ஒதுங்கியிருக்கிறது. மேலும், தேமுதிகவை இத்தேர்தலில் போட்டியிடாமல் விலகிக்கொள்ளுமாறு அதிமுக கேட்டுக் கொண்டு இருக்கலாம் என்று கணிக்க முடிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...