Published : 17 Jun 2024 05:17 PM
Last Updated : 17 Jun 2024 05:17 PM
திருப்பூர்: திருப்பூரில் குடிபோதையில் அரசுப் பேருந்தில் ஏறிய முதியவரை இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநரை பணியிடை நீக்கம் செய்து ஈரோடு போக்குவரத்து கழகத்தின் கோபி கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து தினமும் ஒருமுறை மாற்று பேருந்தாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்துக்கும் இயக்கப்படுகிறது. அப்படி அந்தப் பேருந்து திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கோபி புறப்பட இருந்தது. அப்போது முதியவர் ஒருவர் பேருந்தில் ஏறி உள்ளார். அவர் அரைகுறை ஆடையுடன் இருப்பதை கண்டு, நடத்துநர் தங்கராசு பேருந்தில் இருந்து அவரை கீழே இறக்கிவிட்டுள்ளார். பேருந்தில் இருந்து இறங்கிய முதியவரை, மிரட்டும் தொனியில் இரும்புக் கம்பியால் அடித்துவிடுவதாக நடத்துநர் தங்கராசு மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
இதை அங்கிருந்த பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலாகி விமர்சனத்தை கிப்பிய நிலையில் நடத்துநர் தங்கராசு, உடன் பணியில் இருந்த ஓட்டுநர் முருகன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து ஈரோடு போக்குவரத்து கழகம் கோபி கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
விசாரணையில், “மது போதையில், யாராவது பேருந்தில் ஏறினால் அவர்களை கீழே இறக்கிவிடும்படி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனால் தான் முதியவரை பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்டோம்” என இருவரும் தெரிவித்துள்ளனர். இருந்தபோதும், இரும்புக் கம்பியை வைத்து எப்படி மிரட்டலாம்? என பலரும் நடத்துநர் செயலையும் எவ்வித எதிர்ப்பும் காட்டாத ஓட்டுநரையும் விமர்சித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...