Published : 17 Jun 2024 04:43 PM
Last Updated : 17 Jun 2024 04:43 PM

“அதிமுகவில் சசிகலா மீண்டும் நுழைய முடியாது” - முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம்

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அதிமுகவில் சசிகலா மீண்டும் ‘என்ட்ரி’ கொடுக்க முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது குறித்து திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொதுமக்களை பட்டியில் அடைத்தது போன்று அடைத்து, ஜனநாயக படுகொலையை திமுக செய்தது. தேர்தல் ஆணையம் நேர்மையான தேர்தலை நடத்தினால் நாங்கள் போட்டியிட தயார். தேர்தல் ஆணையத்தால் தேர்தலை நேர்மையாக நடத்துவோம் என உறுதியளிக்க முடியுமா?. அதனால் தான் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம். அதிமுக எப்போதும் புறமுதுகு காட்டுவதில்லை. எப்போதும் அதிமுகவுக்கு வெற்றி தான்.

இந்தத் தேர்தலில், அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டு, ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அத்தனை பேருமே விக்கிரவாண்டியில் முகாமிடுவார்கள். பணபலம், ஆட்பலம், அதிகார துஷ்பிரயோகத்தைப் பிரயோகப்படுத்துவார்கள். அதனால் இந்தத் தேர்தலில் போட்டியிடுவது அதிமுகவுக்கு சக்தி, காலம், பணம் அனைத்தும் வீண்.

இந்தத் தேர்தலில் திமுகவின் அநியாயம், அக்கிரமம், அராஜகம் அனைத்தும் அரங்கேறும். அதனால் தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்தோம்.கட்சி நிர்வாகிகள் கூடி எடுத்த முடிவை, காலம் காலமாக இரட்டை இலைக்கு வாக்களித்த தொண்டர்களும், பொதுமக்களும் கடைபிடிப்பார்கள். அவர்களின் கை வேறு சின்னத்துக்கு வாக்களிக்காது. அவர்களும் தேர்தலை புறக்கணிப்பாளர்கள்.

ஆலந்தூர் கண்டோன்மென்ட் தேர்தல் வாக்குப்பதிவில் அதிமுக முறைகேடு செய்ததாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அந்த தேர்தலை மத்திய அரசு தானே நடத்தியது. அதில் அதிமுக எப்படி தலையிட முடியும்?.

கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 150 வார்டுகளில், 86 வார்டுகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. அந்தளவுக்கு திமுக அராஜகத்தை நடத்தியது. இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலா பற்றி பேசுகையில், “சசிகலாவும், அவரது குடும்பமும் ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டவர்கள். சசிகலாவை மட்டும் ஜெயலலிதா திரும்ப சேர்த்துக் கொண்டார். அவர் கட்சியிலேயே இல்லை. அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத சசிகலாவை பொதுமக்கள் எப்படி ஏற்பார்கள். எக்சிட் ஆனவரால் என்ட்ரி கொடுக்க முடியாது.

சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றைக் கடந்து எல்லா சமூகத்துக்கும் பிரதிநிதித்துவம் கொடுத்து சமத்துவ கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. இதைப் பார்த்து பொறுக்க முடியாதவர்கள் மலிவான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

குழப்பவாதி, சந்தர்ப்பவாதி, சுயநலவாதியான ஓ.பன்னீர்செல்வத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள். அரசியலில் அவர் ஒரு குறுநாவல். அதிமுக வரலாற்றுச் சரித்திரம். தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்கு சதவீதம் ஏறவே ஏறாது. பாஜகவுக்கு தமிழகத்தில் இடமே கிடையாது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x