Published : 17 Jun 2024 08:13 AM
Last Updated : 17 Jun 2024 08:13 AM

என்சிஇஆர்டி பாட திட்டத்தில் இருந்து பாபர் மசூதி குறிப்புகளை நீக்குவதா? - செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இருந்து பாபர் மசூதி பற்றிய குறிப்புகளை முற்றிலும் நீக்கியிருப்பதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: நானூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மிர்பாஹீ என்பவரால் அயோத்தியில் கட்டப்பட்ட பாபர் மசூதி இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலமாக தொடர்ந்து இருந்தது. பாபர் மசூதி தாழ்வாரத்தில்தான் ராமர் பிறந்தார் என்று கூறி உரிமை கொண்டாட இந்துத்துவ அமைப்புகள் 1949 டிசம்பரில் முயற்சி செய்தன.

இதையொட்டி பாபர் மசூதி சர்ச்சைக்குரிய விஷயமாக மாறிவிட்டது. நீதிமன்ற வழக்குகள் என ஆரம்பித்து பாரதிய ஜனதா கட்சி அங்கே ராமர் கோயில் கட்டுவதை தனது அரசியல் நோக்கமாக பிரகடனம் செய்தது. அதற்காக கரசேவை என்ற போர்வையில் ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கினார்கள்.

இது குறித்த வழக்கில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில்ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து நரேந்திர மோடி ஆட்சியில் அங்குராமர் கோயில் சமீபத்தில் கட்டப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்பட்டது.

இந்நிலையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இருந்து பாபர் மசூதிபற்றிய குறிப்புகளை முற்றிலும் நீக்கியிருக்கிறது. இது வரலாற்று சுவடுகளை அப்பட்டமாக மூடிமறைக்கிற செயலாகும்.

திரிபுவாதங்கள்.. இப்படி நீக்குவதன் மூலமாக வரலாற்றில் இருந்து பாபர் மசூதியை நீக்கிவிடலாம் என தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகருதுகிறது. இதன் மூலம் மத்திய பாஜக ஆட்சிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. வரலாற்றிலிருந்து பாபர் மசூதியை நீக்கும் திரிபுவாதங்களை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x