Published : 16 Jun 2024 07:31 PM
Last Updated : 16 Jun 2024 07:31 PM
சென்னை: சமூகத்துக்கு அர்ப்பணிப்புடன் தொண்டாற்றுபவர்களை விருதுகள் தாமாகவே தேடிவரும் என்று விஐடி வேந்தர் விசுவநாதனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் சார்பில் வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் சமீபத்தில் வழங்கப்பட்டது. இதற்காக தமிழியக்கம் சார்பில் விசுவநாதனுக்கு பாராட்டு விழா சென்னையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் தலைமையுரை ஆற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தியை படித்தார்.
அதில் கூறியிருப்பதாவது: "விசுவநாதனுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளதை அறிந்து பெருமிதம் கொள்கிறேன். அவர் சிறந்த கல்வியாளர் மட்டுமின்றி, தமிழக அரசியலில் முக்கிய பங்கு வகித்தவர். தமிழகத்தின் அமைச்சராகவும் பணியாற்றியவர். கல்வித்துறையில் அவர் நிகழ்த்திய சாதனைகள் நம்மை வியக்க வைப்பவை. சமூகத்துக்கு அர்ப்பணிப்புடன் தொண்டாற்றுவேரை விருதுகள் தாமாகவே தேடிவரும். அதேபோல் எண்ணற்ற விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
இந்தியாவின் உயர்கல்வி வாய்ப்புகளை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சென்று அவர் நிகழ்த்தி வரும் அரும்பணிக்காக இந்த அங்கீகாரம் அவரை தேடி வந்துள்ளது. இந்த அங்கீகாரத்தால் மேலும் ஊக்கம் பெற்று இன்னும் பல ஆண்டுகள் சமூகத் தொண்டையும், கல்வித் தொண்டையும் தொடர்ந்து ஆற்றி, மென்மேலும் புகழுடன் வாழ உளமாற வாழ்த்துகிறேன்." என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசும்போது, ‘‘தமிழகத்தில் அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்களில் சொற்பமானவர்கள்தான் கல்விக்காக தங்களை ஈடுபடுத்தி கொண்டவர்கள். அந்தவகையில் கல்விக்காக தன்னை அரசியல் வாழ்க்கையில் இருந்தே விடுவித்துக் கொண்டவர் விசுவநாதன். அவருடைய இலக்கு எங்கும் தமிழ், எதிலும் தமிழ் மட்டுமே. அவரது ஸ்டார் திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு இலவச கல்வியை தந்து வருகிறார். அவர் நூற்றாண்டு கடந்து வாழ வேண்டும்’’ என்றார்.
விசிக தலைவர் திருமாவளவன் பேசும்போது, ‘‘விசுவநாதன் கல்வியை வணிகமாக கருதாமல் மக்கள் முன்னேற்றத்துக்கான கருவியாக அதை கொண்டு செல்கிறார். 2016-ல் சட்டமன்றத் தேர்தலில் விசிக மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. அப்போது, 'தமிழகத்தில் சமூகநீதி அரசியலுக்கு எதிராக சிலர் காலூன்ற பார்க்கிறார்கள். இந்நிலையில் திராவிட கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சி சரியானதல்ல. தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என என்னிடம் விசுவநாதன் கோரினார். ஆனால், முடிவெடுத்து வெகுதூரம் சென்றுவிட்டதால் இனி அதிலிருந்து வெளியேற முடியாது என்று அவரிடம் தெரிவித்தேன். அந்தளவுக்கு தமிழகத்தில் சமூகநிதி அரசியலை பாதுகாக்க தொடர்ந்து செயலாற்றி வருகிறார்’’ என்றார்.
இறுதியாக கோ.விசுவநாதன் ஏற்புரையில் பேசியது: "உயர்கல்வியில் நாம் பின்தங்கிய நாடாக இருக்கிறோம். இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் தான் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த வருவாயில் 6 சதவீதத்தை கல்விக்கு செலவிட வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிவருகிறோம். இன்னும் 3 சதவீதம்கூட தாண்டவில்லை. ஏழ்மையை போக்க கல்வியால் மட்டும்தான் முடியும். இலவசங்கள், ஓரளவுக்குதான் உதவி செய்யும். முழுமையாக மாற்றாது.
கல்வி உயர்ந்தால்தான் பொருளாதாரம் உயரும். நாம், பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இருக்கிறோம். ஆனால், தனிநபர் வருவாய் என்று பார்த்தால், 140-வது இடத்தில் இருக்கிறோம். அதற்கு போதுமான கல்வி கொடுக்காதது முக்கிய காரணம். இந்தியாவை வழிநடத்தும் மாநிலமாக தமிழகம் இருந்தால் நிலைமை மாறும். அரசியலில் இருந்து என்னால் செய்ய முடியாததை, இப்போது ஆண்டுக்கு 8 ஆயிரம் பேருக்கு வேலை வாங்கிதர முடிகிறது. கல்வியில் தமிழகம் முதலிடத்தில் இருக்க வேண்டும். அதற்கு அரசு உட்பட அனைவரின் ஒத்துழைப்பும் தேவை" என்று அவர் பேசினார்.
இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், காங்கிரஸ் மூத்த தலைவர் எம்.கிருஷ்ணசாமி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, முன்னாள் அமைச்சர் பொன்னையன், மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பாராட்டி பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT