Published : 16 Jun 2024 06:23 PM
Last Updated : 16 Jun 2024 06:23 PM
கோவை: தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டதால் தான் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது என, பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் அங்கன்வாடி மைய கட்டிடத்துக்கான பூமி பூஜை இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தலைமை வகித்து பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: கோவை மக்களவை தொகுதியில் அதிகமான வாக்குகளை மக்கள் எங்களுக்கு அளித்துள்ளனர். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அரசியல் என்பது மக்களுக்கு பணி செய்வது. மத்தியில் மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றுள்ளார். உலகளவில் பிரபலமாக இருக்கிறார். இந்தியாவை வளர்ச்சியான நாடாக மாற்ற பலமான அடித்தளத்தை அமைப்பார்.
தமிழகத்தில் அதிக அங்கன்வாடிகளை கொண்டுள்ள தொகுதியாக கோவை தெற்கு தொகுதி மாறி வருகிறது. தமிழகத்தில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம் ஆனால் மத்தியில் நாங்கள் தான் ஆட்சியில் உள்ளோம். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி-க்கள் தமிழக மக்களின் நன்மைக்காக பணியாற்ற வேண்டும்.
குறு, சிறு தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு மத்திய அரசு மட்டுமே தீர்வு தர முடியாது. தமிழக அரசின் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு குறு, சிறு தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளது. தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் பாஜக-வின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் 1996-ம் ஆண்டிலேயே பாஜக காலூன்றி விட்டது.
'இண்டி' கூட்டணி ஒட்டுமொத்தமாக பெற்ற இடங்களைவிட, பாஜக தனித்து பெற்ற இடங்கள் அதிகம். தமிழ்நாட்டில் 11.24 சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரும், அவரது கூட்டணி கட்சித் தலைவர்களும் பாஜக தோற்று விட்டது போலவும், 'இண்டி' கூட்டணி ஆட்சி அமைத்துவிட்டது போலவும் கொஞ்சமும் கூச்சமின்றி பேசி வருகின்றனர்.
திமுகவுக்கு எதிரான கட்சிகள், கூட்டணி அமைக்காமல் பிரிந்து போட்டியிட்டதால் தான், திமுக கூட்டணி 40க்கு 40 இடங்களில் வென்றது. இது முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அனைவருக்கும் தெரியும். 1957-ல் இருந்து தேர்தலில் போட்டியிட்டு வரும் திமுக, ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டதில்லை. தனித்துப் போட்டியிட தைரியம் இல்லாத ஒரே கட்சி திமுக மட்டுமே. அவ்வாறு போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் பாஜகவை ஸ்டாலின் விமர்சிக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT