Published : 16 Jun 2024 04:48 PM
Last Updated : 16 Jun 2024 04:48 PM

அரசியல் எதிரிகளை ஆபாசமாக பேசி அச்சுறுத்துவது தான் திமுக கலாச்சாரமா? - தமிழக பாஜக காட்டம்

சென்னை: அரசியல் எதிரிகளை ஆபாசமாகப் பேசி அச்சுறுத்துவது தான் திமுக கலாச்சாரமா என்று தமிழக பாஜக காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து தமிழுக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'திமுகவின் அதிகாரப்பூர்வ பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆகியோர் பற்றி அறுவெறுக்கத்தக்க வகையில், ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையானது. இது தமிழகத்தில் குறிப்பாக பெண்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் வேறு வழியின்றி அவரை திமுக அரசு கைது செய்தது. அவரை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓர் அறிவிப்பை வெளிட்டு நாடகமாடினார்கள். ஆனால், சில மாதங்களில் மீண்டும் திமுகவில் சேர்த்துக் கொண்டு விட்டார்கள். அவர் மீதான சட்ட நடவடிக்கை என்ன ஆனதென்று தெரியவில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக பிரமுகர் விருதுநகர் வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆபாசமாக அருவறுக்கத்தக்க வகையில் கேவலமாக பேசினார். தமிழக மக்களிடமும் பெண் சமுதாயத்திடமும் பெரும் எதிர்ப்பு கிளம்பிய போதும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழக பாஜக முன்னாள் தலைவர், தெலங்கானா, புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து கொச்சையாக, இழிவுப்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ பேச்சாளரான அவர், தமிழிசையை மட்டும் கொச்சைப்படுத்தவில்லை. ஒட்டுமொத்த பெண்களையும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார். இழிவுபடுத்தி இருக்கிறார். இது கடும் கண்டனத்திற்குரியது. இது போன்ற குற்றங்களுக்காக ஏற்கனவே அவர் மீது பல வழக்குகள் உள்ளதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இதுபோல ஒரு கட்சியின் தலைவர்களை குறி வைத்து இழிவுபடுத்தி பேசி வருவது, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி, அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் உள்நோக்கம் கொண்டதாகும். எனவே, அவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆபாசமாக மற்றவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது அவரது பிரச்னை மட்டுமல்ல. திமுகவின் கலாச்சாரமே அதுதான். திமுகவில் அதிகாரப்பூர்வமாக பேச்சாளர்கள் நூற்றுக்கணக்கில் நியமித்திருப்பதே, அரசியல் எதிரிகளை, கொள்கை எதிரிகளை ஆபாசமாக, அருவருக்கத்தக்க வகையில் பேசி அச்சுறுத்ததான். திமுக பேச்சாளர்களின் ஆபாச அர்ச்சனைக்கு நாட்டின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி போன்றவர்களே தப்ப முடியவில்லை. அன்னை இந்திரா என்று காங்கிரஸ் கொண்டாடும் முன்னாள் பிரதமரை இந்திரா காந்தியையே அச்சிலேற்ற முடியாத அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகளால் கொச்சைப்படுத்தி அரசியல் செய்த கட்சி தான் திமுக.

எனவே,திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் ஆபாச பேச்சுக்கு, ஜனநாயகம், பெண்ணுரிமையில் நம்பிக்கை கொண்ட அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஜனநாயகத்தில், பெண் உரிமையில் திமுகவுக்கு உண்மையான அக்கறை இருந்தால், அநாகரிகத்தின் அருவருப்பான வார்த்தைகளின் உருவமாக செயல்படும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இல்லையெனில், திமுக தலைமை சொல்லி தான் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இப்படி பேசி வருகிறார் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.'' இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x