Last Updated : 16 Jun, 2024 04:36 PM

 

Published : 16 Jun 2024 04:36 PM
Last Updated : 16 Jun 2024 04:36 PM

நெல்லை | தூங்கிக்கொண்டிருந்த இளைஞர்; லாரியில் இருந்து கொட்டப்பட்ட மண்ணில் புதைந்து உயிரிழப்பு

இளைஞர் உயிரிழப்பு

திருநெல்வேலி: லாரியில் இருந்து கொட்டப்பட்ட மண்ணில் புதைந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திருநெல்வேலி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயில் அருகே தூங்கிக்கொண்டு இருந்தபோது இந்த பரிதாபம் நடைபெற்றுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடி செல்லப்பிள்ளை விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரது மகன் பேச்சிமுத்து (28). அருணாசலத்தின் மனைவி மற்றும் ஒரு மகன் ஏற்கெனவே இறந்துவிட்டனர். இதனால் அருணாச்சலமும், பேச்சிமுத்துவும் தனியாக வசித்து வந்தனர். பேச்சிமுத்து கட்டிட வேலை பார்த்து வந்தார்.

அதே பகுதியில் உள்ள விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடைபெற உள்ளதால் அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், நேற்று இரவு அந்த கோயில் அருகே பேச்சிமுத்து படுத்து தூங்கியுள்ளார். அப்போது, டிப்பர் லாரியில் எம் சேண்ட் கொண்டுவந்த வடக்கு காருகுறிச்சியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முத்துக்குமார் (29) என்பவர் கோயில் அருகே பேச்சிமுத்து தூங்கிக்கொண்டு இருந்ததை கவனிக்காமல் அவர் மீது மண்ணை கொட்டிவிட்டு சென்றுள்ளார்.

இன்று அதிகாலையில் வீட்டில் அருந்து வெளியே வந்த மாரியப்பன் என்பவர், எம் சேண்ட் மண்ணில் ஒருவர் கால் புதைந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து சென்று, மண்ணை அகற்றி பார்த்தபோது பேச்சிமுத்து மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.

உடனடியாக அவரை மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பேச்சிமுத்துவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வீரவநல்லூர் போலீஸார் பேச்சிமுத்து உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலீஸார் வழக்கு பதிவு செய்து, டிப்பர் லாரி ஓட்டுநர் முத்துக்குமாரை கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x