Published : 16 Jun 2024 01:27 PM
Last Updated : 16 Jun 2024 01:27 PM
சென்னை: நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம், சகோதரத்துவம், அன்புநெறியை பின்பற்றி வாழும் இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்துகள் தெரிவிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்தியில், “நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம் - சகோதரத்துவம் - அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள்!
ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை ‘ஈத்துவக்கும் இன்பம்’ என்பார் அய்யன் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இஸ்லாமியப் பெருமக்களுக்கு வழிகாட்டுவதே இந்த பக்ரீத் பெருநாள். நபிகள் நாயகத்தின் போதனைகள் அன்றாட வாழ்வில் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறவழிக்கான அறிவுரைகளாகவே அமைந்திருக்கின்றன.
நபிகள் நாயகத்தின் அத்தகைய அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்கின்ற இஸ்லாமிய மக்கள் அனைவரும் இந்த பக்ரீத் பெருநாளை இனிதே கொண்டாடி மகிழ எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
எம்.எச். ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் (பக்ரீத்) வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சகோதரத்துவம், ஒற்றுமையுணர்வு, நிலைகுலையாமை, இரக்கம் மற்றும் தியாகத்தின் செய்தியை நமக்கு உணர்த்தும் திருநாளாக தியாகத் திருநாள் விளங்குகின்றது. இந்தத் திருநாளில் இந்த நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும், பிறர் இன்பத்தில் மகிழுறும் மனநிலை ஏற்படவும் நாம் உறுதி எடுத்துக்கொள்வோமாக.
நமது நாட்டு மக்களிடையேயும் சகோதரத்துவமும், அன்பும், கருணையும், இரக்கமும் தழைத்தோங்குவதற்கு இறைவனிடம் பிரார்த்திப்போமாக. பாலஸ்தீனம் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்கள் நீங்கவும் பிரார்த்திப்போமாக. புதிதாக பொறுப்பேற்றுள்ள ஒன்றிய அரசு, அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளை கடைபிடிக்கும் அரசாக செயல்படுவதற்கும் பிரார்த்திப்போமாக. அனைவருக்கும் நெஞ்சார்ந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT