Published : 16 Jun 2024 12:47 PM
Last Updated : 16 Jun 2024 12:47 PM

“நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசை கைவிட வேண்டும்” - முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: “சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசை கைவிட வேண்டும்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் நடந்த நீட் தேர்வு சர்ச்சைகளை மேற்கோள்காட்டி முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நீட் தேர்வு விவகாரத்தில் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் அதன் சமத்துவமின்மையை காட்டுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் முன்னேற்றத்துக்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். மாறாக, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கான வாய்ப்பை நீட் தேர்வு தடுக்கிறது.

தேசிய தேர்வு முகமையை (NTA) தற்காக்கும் விதமாக மத்திய கல்வி அமைச்சர் செயல்பட்டாலும், சமீபத்திய நிகழ்வுகள் வித்தியாசமாக உள்ளன. நீட் தேர்வில் வெற்றிபெறுவதற்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைககளை பெற்றுக்கொண்டு ஓஎம்ஆர் தாள்களை கண்காணிப்பாளர்கள் சேதப்படுத்தியதாக குஜராத் காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. ஒரு பள்ளி முதல்வர், ஒரு இயற்பியல் ஆசிரியர் மற்றும் பல நீட் பயிற்சி மையங்கள் சம்பந்தப்பட்ட இந்த சதி நீட் தேர்வு விவகாரத்தில் முறையான மாற்றத்துக்கான அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அனிதா முதல் எண்ணற்ற மாணவர்கள் வரை பரிதாபகரமாகத் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதை நாம் நேரில் பார்த்திருக்கிறோம். தகுதியின் அளவுகோலாகக் கருதப்படும் நீட் தேர்வு, சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் பாதிக்கும் ஒரு பரவலான மோசடி என்பது மீண்டும் மீண்டும் வெளிப்பட்டு வருகிறது. மாணவர் விரோத, சமூக நீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்." என்று பதிவிட்டுள்ளார். குஜராத்தில் நீட் தேர்வு முறைகேட்டில் 5 பேர் கைதாகியுள்ளதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x