Published : 16 Jun 2024 12:44 PM
Last Updated : 16 Jun 2024 12:44 PM

என்டிஏ கூட்டணியின் வெற்றிக்கணக்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தொடங்கும்: டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கணக்கை தொடங்கிடும் தேர்தலாக அமையட்டும் என்றும் தடைகளையும் எதிர்ப்புகளையும் துணிவுடன் எதிர்கொண்டு தீவிர தேர்தல் களப்பணியாற்றிட கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள் விடுப்பதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் வரும் ஜூலை 10 ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதென ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு அக்கட்சியின் சார்பில் சி.அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கச்சத்தீவை தாரைவார்த்ததில் தொடங்கி தமிழ்நாட்டின் ஜீவாதாரமான காவிரி, முல்லைப்பெரியாறு அணை விவகாரம், நாள்தோறும் அரங்கேறும் சட்டம், ஒழுங்கு சீர்கேடுகள், இளைய சமுதாயத்தை குறிவைக்கும் போதைப் பொருட்களின் கலாச்சாரம், என அனைத்து வழிகளிலும் தமிழக மக்களுக்கு துன்பம் இழைத்துக் கொண்டிருக்கும் தி.மு.க. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றிபெறத் துடிப்பது தங்களை வளப்படுத்திக் கொள்வதற்காகத் தானே தவிர, மாநிலத்திற்கோ மக்களுக்கோ நல்லது செய்வதற்காக அல்ல என்பதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.

ஆட்சி அதிகாரத்தை சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆளும் தி.மு.க.வை எதிர்கொள்ளமுடியாமல் தேர்தல் களத்திலிருந்து வெளியேறியிருப்பதன் மூலம் பழனிசாமியை தமிழக மக்கள் ஏற்கனவே புறக்கணித்துவிட்டார்கள் என்பது தெள்ளத்தெளிவாகிறது. அராஜகத்திற்கும் அத்துமீறல்களுக்கும் அடையாளமாகிப் போன தி.மு.க.விற்கும், மக்களை சந்திக்கமுடியாமல் தேர்தலை புறக்கணித்து புறமுதுகிட்டு ஓடும் பழனிசாமிக்கும் தகுந்த பாடம் புகட்டும் வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் C.அன்புமணியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. வேரின்றி மரமில்லை என்பதைப் போல தொண்டர்களின்றி நானில்லை என்று சொல்லும் அளவிற்கு தன்னலம் கருதாத தொண்டர்களை பெற்றிருப்பது நான் செய்த பாக்கியமாகவே கருதுகிறேன்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், சென்னை முதல் கன்னியாகுமரி வரை சாதி மதங்களை கடந்து ஆளுங்கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் சவால் விடும் அளவிற்கு கழகம் தொடர்ந்து பயணிக்கிறது என்றால் அதற்கு என் உயிரினும் மேலான தொண்டர்கள் மட்டுமே காரணம். ஆகவே, ஆளும் திமுகவை தீரத்துடன் எதிர்கொண்டு தீவிர தேர்தல் களப்பணியின் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்திடும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கீழ்கண்டவாறு தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து பணியாற்ற கழகத்தின் அனைத்து நிலையிலான நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். தடைகளையும், எதிர்ப்புகளையும் துணிவுடன் எதிர்கொண்டு தீவிர தேர்தல் களப்பணியாற்றுவோம். அரசியல் நெருக்கடிகளையும் சூழ்ச்சிகளையும் முறியடித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி முத்திரையை பதித்திடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் விவரம்:

1.C.கோபால் Ex.MP கழக தலைவர்
2. M.கோமுகி மணியன் Ex.MLA கழக துணை தலைவர், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர்
3. C.சண்முகவேலு Ex.Minister கழக துணை பொதுச்செயலாளர், திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர்
4. M.ரெங்கசாமி Ex.MLA கழக துணை பொதுச்செயலாளர், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்
5. G.செந்தமிழன் Ex.Minister கழக துணை பொதுச்செயலாளர், தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர், கழக செய்தி தொடர்பாளர்
6.S.V.S.P.மாணிக்கராஜா கழக துணை பொதுச்செயலாளர், கயத்தாறு ஒன்றியக் குழு பெருந்தலைவர் உள்ளிட்ட 33 பேர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x