Published : 16 Jun 2024 12:02 PM
Last Updated : 16 Jun 2024 12:02 PM

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

மதுரை: “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்தது. சுதந்திரமாக தேர்தல் நடக்காது என்பதால்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது” என்று விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக வலிமையோடு இருக்கிறது. ப.சிதம்பரத்துக்கும், அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வந்தது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்தது. வாக்காளர்களை சுதந்திரமாக வாக்களிக்க விடாமல், ஆடு மாடுகளை பட்டியில் அடைப்பது போல் அழைத்துசென்ற காட்சியை பார்த்தோம். தேர்தல் ஆணையம் அதனை கண்டுகொள்ளவில்லை.

தேர்தல் ஆணையம், காவல்துறை, அரசு அதிகாரிகள் மாநில அரசுக்கு துணைபுரிகிறார்கள். அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு, ஆட்சி அதிகாரம், பணபலத்தை பயன்படுத்தி, பரிசு பொருட்களை கொடுத்து ஈரோடு கிழக்கில் தேர்தல் நடந்தது. இதேபோல், சுதந்திரமாக தேர்தல் நடக்காது என்பதால்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி சட்டப்பேரவையில் அதிமுக, திமுக கூட்டணியை விட 6 ஆயிரம் வாக்குகள் தான் குறைவு. அப்போதே எங்களுக்கு என்ன வாக்குகள் கிடைக்கும் என்பது தெரிந்துவிட்டது. மறுபடியும் போட்டியிட நினைத்தால் விடமாட்டார்கள்.
சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாததால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது.

திமுக 200 இடங்களில் வெல்லும் என்று ஸ்டாலின் பேசுகிறார். அவரின் கனவு பலிக்காது. தமிழக மக்களை பொறுத்தவரை மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை பிரித்து பார்த்து தான் வாக்களிக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு." என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x