Published : 30 May 2018 09:18 AM
Last Updated : 30 May 2018 09:18 AM

பொதுமக்களை கவரும் ‘சென்னை ரயில்’ கண்காட்சி: பாரம்பரிய இன்ஜினுடன் புதிய காட்சியரங்கு திறக்க திட்டம்

பெரம்பூரில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ஐசிஎப்) வளாகத்தில் சென்னை ரயில் மியூசியம் என்ற பெயரில் நிரந்தரமான கண்காட்சி இருக்கிறது. 160 ஆண்டு பாரம்பரியமிக்க இந்திய ரயில்வேயின் பரிணாம வளர்ச்சி யைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் மொத்தம் 4.3 ஏக்கரில் இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை 2002-ல் அப்போதைய ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைத்தார்.

இங்கிலாந்தில் 1895-ல் அறிமுகமான நீராவி ரயில் இன்ஜின் முதல் இந்திய ரயில்வே துறை யில் தற்போதுள்ள ரயில்கள் மற்றும் ரயில் பெட்டிகளின் மாதிரிகளை இங்கு காணலாம். சிக்னல்களின் செயல்பாடுகள், ரயிலை இயக்கும் தொழில்நுட்பம் எப்படி என்பதன் காட்சிகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன.

பாரம்பரிய ரயில்களின் புகைப்படங்கள் மற்றும் ‘ரயில்பெட்டி மாதிரி’ கொண்ட சிறப்பு காட்சிக் கூடமும் திறக்கப்பட்டுள்ளது.இந்தக் கண்காட்சிக்கு வருவோ ரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 20 சதவீதம் அதிகரித்து வருகிறது. கோடை விடுமுறை யில் மக்கள் அதிக அளவில் வந்து கண்காட்சியை பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இதேபோல் ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டுப் புகைப்படங்களை எடுத்து செல்கின்றனர்.

இதுதொடர்பாக சென்னை ரயில் கண்காட்சியின் ஒருங்கிணைப்பு அதிகாரி என்.பாஸ்கரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சென்னை ரயில் மியூசியத்தை மேலும் மேம்படுத்தப் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த கண்காட்சியை மேம்படுத்த 2017-18-ல் ரூ.1 கோடியே 39 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. 2018-19-ல் ரூ.1 கோடியே 5 லட்சம் செலவிட ரயில்வே வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது.

அதன்படி, இந்த ரயில் கண்காட்சியில் அடுத்த 3 ஆண்டுக் குள் பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொள்ள இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம். இந்திய ரயில்வே துறையின் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் சிறிய வீடியோக்களை திரையிட இங்கு விரைவில் சிறிய தியேட்டர் தொடங்கப்படும்.

இதேபோல், இந்த வளாகத்திலேயே மேலும் ஒரு பெரிய காட்சியரங்கு அமைக்கவுள்ளோம். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுமக்கள் கருத்து

இதுதொடர்பாக ரயில் கண்காட்சியை பார்வையிட்ட சிலர் கூறியதாவது:

‘‘இந்த கண்காட்சி இந்திய ரயில்வேயின் வரலாறு, பாரம்பரிய ரயில் இன்ஜின் மற்றும் ரயில் பெட்டிகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும் பார்வையிடுவதற்கும் மிகவும் பயனுள்ள தாக இருக்கிறது. ரயில்களின் வரலாறு, இயக்கம் குறித்து அறிவியல் பூர்வமான தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது.”

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x