Published : 15 Jun 2024 04:35 PM
Last Updated : 15 Jun 2024 04:35 PM
சென்னை: “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மரணப்படுக்கையில் கிடக்கிறது” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரமாகி விட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, தமிழகம் முழுவதும் குற்றச் செயல்கள் அதிகரித்திருக்கின்றன. வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் மிகவும் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்திருக்கிறது. நீதிமன்றங்களில், பரபரப்பான சாலைகளில், பொதுமக்கள் கூடும் இடங்களில், பள்ளி, கல்லூரி வாசல்களில், காவல் நிலையங்களில் என படுகொலைகள் நடைபெறாத இடங்களே இல்லை.
தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பே இல்லை. உண்மையில் முதல்வரின் பொறுப்பில் இருக்கும் காவல்துறை இயங்குகிறதா என்ற கேள்வியையும், அச்ச உணர்வையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, தலைநகர் சென்னை, கொலை நகரமாக மாறிவிட்டது. தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் நடைபெறும் குற்றங்களுக்குப் பழி தீர்க்கும் இடமாக சென்னை மாறியிருக்கிறது.
கொலைக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக் இருக்கின்றனர். பெருகியிருக்கும் கஞ்சா புழக்கத்தினால், இளைஞர்களை அடிமையாக்கி, குற்றச் செயல்களில் கூலிப்படையாகச் செயல்பட தூண்டப்படுகின்றனரோ, என்ற சந்தேகம் எழுகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் புழக்கத்தை, திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுகிறது.
சென்னையின் மிக முக்கியப் பகுதியான அண்ணாநகர் பகுதியில் துணை காவல் ஆணையர் அலுவலகம் அருகில் தமிழக பாஜக மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் நதியாவின் கணவர் சீனிவாசன் மீது கூலிப்படையினரை கொண்டு நேற்று பட்டப்பகலில் கொலை வெறித் தாக்குதல் நடந்திருக்கிறது. இது காவல்துறை முற்றிலும் செயலிழந்திருப்பதை காட்டுகிறது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு என்பது மரணப்படுக்கையில் கிடப்பதை உணர முடிகிறது.
நேற்று மட்டும் சென்னையில் நடந்த 3 கொலைகள் இங்கிருக்கும் சட்டம் - ஒழுங்கை பிரதிபலிக்கிறது. மேலும், சென்னையில் கடந்த மே 1-ம் தேதி முதல் ஜூன் 13-ம் தேதி வரை 13 கொடூரக் கொலைகள் நடந்திருக்கின்றன. திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சியில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியவில்லை. போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க முடியவில்லை. ஆனால், திமுக அரசோ, ஆட்சியை விமர்சிப்பவர்களையும், எதிர்கட்சியினரையும் பழிவாங்குவதற்காக மட்டுமே உளவுத் துறையையும், காவல் துறையையும் பயன்படுத்துகிறது.
பொதுமக்கள் தங்கள் பாதுகாப்புக்கு இனி காவல்துறையை நம்பிப் பயனில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். தமிழகத்தில் குற்றச் செயல்களையும், போதைப் பொருட்கள் புழக்கத்தையும் இனியும் கட்டுப்படுத்தவில்லை என்றால், பெரும் எதிர்விளைவுகளை திமுக அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT