Published : 12 May 2018 07:38 AM
Last Updated : 12 May 2018 07:38 AM
தோட்டத்தில் மகனைக் கொன்று புதைத்த இடத்தை எழுத்தாளர் சௌபா நேற்று சுட்டி காட்டினார். இதையடுத்து, தோண்டி எடுக்கப்பட்ட உடலை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
மதுரை டோக்நகரைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சௌந்தரபாண்டியன் என்ற சௌபா (55). இவர், தனது மகன் விபினை (27) கொலை செய்ததாக, மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் கொலை செய்த மகனின் உடலை தனக்கு சொந்தமான திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே சிறுமலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் புதைத்ததாக தெரிவித்தார். இதையடுத்து எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன் தலைமையிலான போலீஸார் சௌபாவை கொடைரோடு அருகேயுள்ள தோட்டத்துக்கு நேற்று காலை அழைத்து வந்தனர். அதன்பின்னர் மதுரையிலிருந்து டாக்டர்கள் ராஜவேலு, சதாசிவம் ஆகியோர் வந்தனர்.
நிலக்கோட்டை வட்டாட்சியர் நிர்மலாகிரேஸ், டி.எஸ்.பி. கார்த்திகேயன் முன்னிலையில், தனது மகனைப் புதைத்த இடத்தை சௌபா சுட்டிக்காட்ட, அந்த இடம் தோண்டப்பட்டது. அந்த இடத்தில் தலை, கால்கள் முழுமையாக எரிந்த நிலையிலும், மீதமுள்ள உடல் பாகங்கள் பாதி எரிந்த நிலையிலும் காணப்பட்டன. டாக்டர்கள் பரிசோதனைக்கு பின்னர் முக்கிய பாகங்கள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள உடல்பாகங்கள் கொலையான விபினின் தாய்மாமன் பாண்டியராஜனிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன்பிறகு எழுத்தாளர் சௌபாவை போலீஸார் மீண்டும் மதுரைக்கு அழைத்துச் சென்றனர். உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட விபினின் உடல் பாகங்களை தோட்டத்திலேயே மீண்டும் புதைத்தனர்.
தோட்ட காவலாளிக்கு ஆறுதல்
போலீஸார் சௌபாவை தோட்டத்துக்கு அழைத்து வந்தபோது அங்கிருந்த தோட்டக் காவலாளி கருப்பையா சௌபாவை கட்டிப் பிடித்து அழுதார். அவருக்கு ஆறுதல் சொன்ன சௌபா, ‘சாப்பிட்டியா’ என்று கேட்டுவிட்டு அருகில் இருந்த ஒருவரிடம் காவலாளிக்கு சாப்பாடு வாங்கித் தருமாறு கூறினார். தோட்டத்துக்குள் வந்தது முதல் வெளியே செல்லும்வரை பதற்றத்துடன் இல்லாமல் சாதாரணமாகவே காணப்பட்டார் சௌபா.
இந்நிலையில் போலீஸ் காவல் முடிந்ததை தொடர்ந்து எழுத்தாளர் செளபா மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் நிம்மதியாக இருப்பேன்
நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு, சிறிது நேரம் நண்பர்கள், வழக்கறிஞர்களுடன் செளபா பேசினார். அப்போது, வெளியில் இருந்தபோது, மகனால் ஏராளமான தொல்லைகளைச் சந்தித்தேன்.
இனிமேல் சிறைக்குள் இருப்பதே எனக்கு நிம்மதி. மனைவி வழியில் இருந்த தொந்தரவுகள் இனிமேல் எனக்கு இருக்காது. சிறை அனுபவத்தை பயன்படுத்தி முடிந்தால் ஏதாவது கதை எழுதுவேன் எனக் கூறியதாக நண்பர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT