Published : 15 Jun 2024 10:03 AM
Last Updated : 15 Jun 2024 10:03 AM
திருச்சி: தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கேஎன் நேருவின் முகநூல் பக்கத்தில் லால்குடி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர் சௌந்தர பாண்டியன் கமெண்ட் பகுதியில் வெளியிட்டஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு, மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் மற்றும் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார் இது தொடர்பாக அமைச்சர் கேஎன் நேரு தனது முகநூல் பக்கத்தில், லால்குடியில் புதிய வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கான இடங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் மற்றும் அரசு அலுவலர்கள், மண்டல தலைவர், மாமன்ற உறுப்பினர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர் என பதிவிட்டிருந்தார்.
அமைச்சரின் இந்தப் பதிவுக்கு கமெண்ட் பகுதியில் லால்குடி சட்டப்பேரவை உறுப்பினர் அ.சௌந்தர பாண்டியனின் வெளியிட்ட ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லால்குடி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர் சௌந்தரபாண்டியன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன் இயற்கை எய்தி விட்டதால் லால்குடி தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டது எனப் பதிவிட்டுள்ளார்
இது தற்போது திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இவரது பதிவை தொடர்ந்து பலரும் லால்குடி எம்எல்ஏவை ஏன் ஆய்வு நிகழ்ச்சியில் காணவில்லை. மண்ணின் மைந்தர் எங்கே எனப் பலரும் பதிவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியனிடம் கேட்டபோது அவர் ’இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: “கடந்த சில மாதங்களாகவே அதிகாரிகள் ஒரு எம்எல்ஏவாக இருந்தும் என்னை புறக்கணிக்கின்றனர். எனது தொகுதியில் ஆய்வு பணிக்கு அமைச்சர் வருவது தொடர்பாக எனக்கு எந்த தகவலையும் அதிகாரிகளோ, அமைச்சர் தரப்பில் இருந்தோ தெரிவிப்பதில்லை.இது மிகுந்த மனவலியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இதுபோன்று நடைபெறுவதால் தான் நான் அவ்வாறு பதிவிட்டேன்” என்றார்.
தற்போது நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் உங்களது பணி எப்படி இருந்தது என கேட்டதற்கு, “அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு போட்டியிட்ட பெரம்பலூர் தொகுதியில் லால்குடி சட்டப்பேரவை தொகுதியும் இடம்பெற்றுள்ளது. நான் எப்படி பணியாற்றினேன் என்பது கட்சியினருக்கு நன்றாக தெரியும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT