Last Updated : 07 May, 2018 04:07 PM

 

Published : 07 May 2018 04:07 PM
Last Updated : 07 May 2018 04:07 PM

நீட் தேர்வு எழுதிய மகளுக்குத் துணையாக குடும்பத்துடன் வந்த தந்தை புதுச்சேரியில் திடீர் மரணம்

நீட் தேர்வு எழுதிய மகளுக்காக குடும்பத்துடன் கடலூரிலிருந்து வந்த தந்தை புதுச்சேரியில் மாரடைப்பால் உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் அவர் சடலத்தை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தராததால் தனியார் மூலம் உறவினர்கள் ஏற்பாடு செய்து பண்ருட்டிக்கு எடுத்துச் சென்றனர்.

நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களிலேயே அதிக மையங்கள் ஒதுக்கப்பட்டன. மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் அழைத்துச் சென்றபோது ஏற்பட்ட மன அழுத்தத்தினால் திருவாரூரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் ஆகிய 2 பேர் மாரடைப்பால் இறந்தனர். இச்சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், புதுவையிலும் தேர்வெழுதிய ஒரு மாணவியின் தந்தை இறந்துள்ளார்.

புதுச்சேரியில் நேற்று 12 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. அதில் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தேர்வுகளை எழுதினர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அங்குசெட்டி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் வயது 52. மேல்மருவத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள். மூத்த மகள் சுவாதி மருத்துவராக வேண்டும் என்ற விருப்பத்தில் கடினமாகப் படித்து வந்தார். இதனையடுத்து அவர் நீட் தேர்விற்கு விண்ணப்பித்திருந்தார். சுவாதிக்கு நீட் தேர்விற்கு புதுவை வேல்ராம்பட்டில் உள்ள சாரதா கங்காதரன் கல்லூரியில் மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்காக சீனிவாசன் அவரது மனைவி அமுதா, சுவாதி அவரது தங்கை ஆகியோர் நேற்று புதுவை வந்தனர். சுவாதியை தேர்வெழுத அனுப்பிவிட்டு, குடும்பத்தினர் வெளியில் காத்திருந்தனர். அப்போது சீனிவாசன் மயங்கி விழுந்துள்ளார்.

உடனே அங்கிருந்தவர்கள் உதவியுடன் அமுதா கணவரை புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வலிப்பு வந்துள்ளது. இதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சீனிவாசன் உயிரிழந்தார்.

தேர்வு அதைத்தொடர்ந்து மனஅழுத்தம் காரணமாகத்தான் சீனிவாசன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் தராததால் தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சீனிவாசன் உடலை உறவினர்கள் பண்ருட்டிக்கு எடுத்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x