Last Updated : 14 Jun, 2024 07:46 PM

 

Published : 14 Jun 2024 07:46 PM
Last Updated : 14 Jun 2024 07:46 PM

“அன்னியூர் சிவாவின் வெற்றி... கௌதம சிகாமணியின் வெற்றி!” - அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசினார்.

விழுப்புரம்: "அன்னியூர் சிவாவின் வெற்றி, கௌதம சிகாமணியின் வெற்றியாகும்" என விழுப்புரம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச்செயலாளரும், உயர் கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி பேசியது: "நான் ஒன்றை குறிப்பாக சொல்லியாக வேண்டும். நான் பேராசிரியராக பணியாற்றியபோது ஜனக ராஜ், புஷ்ப ராஜ் ஆகியோர் படித்துக் கொண்டிருக்கும்போதே பெரியார், அண்ணா, கலைஞர் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள். வீட்டில் ராஜேஷ் என அழைக்கபடும் கௌதம சிகாமணி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலேயே திமுகவுக்காக பணியாற்றியவர்.

மாணவர் பருவத்திலேயே அவர்கள் திமுகவின் கொள்கையை பின்பற்றியவர்கள். அன்னியூர் சிவா, ஜெயசந்திரன் சொன்னது போல 25 ஆண்டுகளுக்கு முன்பே தளபதி நற்பணி மன்றம் துவக்கி அப்போதே உதயநிதியை அழைத்து விழுப்புரம் நகரத்துக்கு அழைத்து வந்தவர். திமுகவை வளர்க்க அப்போதே உழைத்தவர். அந்த உழைப்பிற்குத்தான் திமுக தலைமை இன்று மாவட்டத்தின் பொறுப்பாளராக கௌதமை அடையாளம் காட்டியுள்ளது. தற்போது முதல் சவால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலாகும்.

இத்தேர்தலில் சிவா பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. விசிக வேட்பாளருக்கு அதிக வாக்குகளை கொடுத்த தொகுதி விக்கிரவாண்டியாகும். எனவே, நாம் ஒன்றிணைந்து பணியாற்றி நம் வெற்றியை உறுதியாக்க பாடுபடவேண்டும். அன்னியூர் சிவா 1989-ம் ஆண்டு முதல் திமுகவுக்கு உழைத்தவர். அவரின் அப்பா தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும்போதே திமுகவுக்கு உழைத்தவர். திமுக என்றால் குடும்பம் குடும்பமாக அரசியலில் செயல்பட்டு வருபவர்கள்தான்.

அது கலைஞர் குடும்பமாக இருந்தாலும், என் குடும்பமாக இருந்தாலும், நீங்களாக இருந்தாலும் எல்லோருக்கும் பொருந்தும். ஒன்றிய செயலாளர் ரவி துரையின் அப்பா சிந்தாமணி ஜெயராமன். அந்த ரவிதுரை ஒன்றிய செயலாளர். அவரின் மகள் ஒன்றியக் குழுத் தலைவர். இப்படி இங்கு உள்ளவர்கள்தான் வழிவழியாக வந்தவர்கள். நம்முடன் வந்து இணைந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் ஜெயசந்திரன் செஞ்சியாருடன் சென்று திரும்பிவந்தவர்தான். லட்சுமணன் எம்எல்ஏ திமுகவில் இணைந்த பின் மும்முரமாக பணியாற்றிவருகிறார்.

முன்னாள் எம்எல்ஏ செந்தமிழ் செல்வன் பாமகவிலிருந்து வெளியே வந்து திமுகவில் இணைந்தவர்தான். கொள்கை ரீதியாக திமுக செயல்படுவதால்தான் மாற்றுக் கட்சியிலிருந்து வந்து இணைந்துள்ளனர். கொள்கையோடு கட்சி, ஆட்சியை நடத்தும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான். அன்னியூர் சிவாவை லட்ச கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். இந்த வெற்றி அன்னியூர் சிவாவுக்கு கிடைக்கும் வெற்றி மட்டுமல்ல. மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணிக்கு கிடைக்கும் வெற்றியாகும்" என்று அவர் பேசினார்.

வீதி வீதியாகச் சென்று ஓட்டுகேட்ட சிறுவனுக்கு எம்எல்ஏ சீட் கொடுத்த முதல்வர்: இக்கூட்டத்தில் பேசிய வேட்பாளர் அன்னியூர் சிவா “கடந்த 1984-ம் ஆண்டு முகையூர் சட்டமன்ற தேர்தலின்போது ‘போடுங்கம்மா ஓட்டு, உதய சூரியனைப் பார்த்து’ என்று வீதி, வீதியாகச் சென்று ஓட்டுக் கேட்ட அந்த சிறுவன் தான், இன்றைக்கு வேட்பாளராக உங்கள் முன் நிற்கிறேன். வீதி வீதியாக ஓட்டுக் கேட்ட என்னையும் எம்எல்ஏ வேட்பாளராக அறிவித்த முதல்வருக்கும், பரிந்துரைத்த அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x