Published : 14 Jun 2024 05:32 PM
Last Updated : 14 Jun 2024 05:32 PM

13 ஆண்டுகளுக்குப் பிறகு இடைத்தேர்தலில் போட்டி - பாமக ‘கொள்கை’யை தளர்த்திய பின்னணி!

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் 13 ஆண்டுகளுக்குப் பின் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவுள்ளது.

கடந்த ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்க, பாமக போட்டியில்லை என அறிவித்தது. மேலும் அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், "சட்டப்பேரவையில் ஒரு எம்எல்ஏ அல்லது இரண்டு எம்எல்ஏக்களால் பெரும்பான்மை இழக்கும் சூழலில் மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதனை விடுத்து மற்ற நேரங்களில் இடைத்தேர்தல் நடத்துவது என்பது தேவையற்ற ஒன்று.

அது நேரம், காலம் - பொருளை வீணடிக்கும் செயல். சுயேச்சை எம்எல்ஏக்கள் இல்லாமல் கட்சியை சார்ந்த எம்எல்ஏக்கள் உயிரிழந்தால், அந்தக் கட்சியைச் சேர்ந்த வேறொருவரை நியமனம் செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும். இதனை தொடர்ந்து பாமக வலியுறுத்தி வருகிறது. இடைத்தேர்தலை காரணமாக கொண்டு, அமைச்சர்கள் ஒரு மாதத்தை வீணடிப்பது தேவையில்லாத ஒன்று. இந்த ஒரு எம்எல்ஏவால் தமிழகத்தில் எந்த அரசியல் மாற்றமும் வரப் போவதில்லை" என்றார்.

அன்புமணி பேசிய வார்த்தைகள் கடந்த சில ஆண்டுகளாக இடைத்தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு. இதே கருத்தை இதற்கு முன் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "ஒரு கட்சியை சார்ந்த எம்எல்ஏக்கள் உயிரிழந்தால், அந்தக் கட்சியைச் சேர்ந்த வேறொருவரை நியமனம் செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும். இடைத்தேர்தல்களே நடத்தக்கூடாது" என்று கூறி, தொடர்ந்து இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதை பாமக தவிர்த்தே வந்தது. கடைசியாக பாமக போட்டியிட்ட இடைத்தேர்தல் என்றால், அது 2009-ல் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டதுதான். பென்னாகரம் இடைத்தேர்தல் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

ஏனென்றால், 2011-ல் தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவிருந்தால், அதற்கான முன்னோட்டமாக அனைத்துக் கட்சிகளும் போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் பாமக சார்பில் அக்கட்சியின் தற்போதைய கவுரவ தலைவராக உள்ள ஜி.கே.மணியின் மகன் தமிழ் குமரன் பென்னாகரம் வேட்பாளராக்கப்பட்டார். தேர்தல் முடிவில் திமுக வெற்றிபெற, பாமக 41,285 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்தது. இதனைத் தொடர்ந்து தான் இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற கொள்கை முடிவை பாமக எடுத்தது.

இத்தனைக்கும் 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்த 22 தொகுதிகளில் பாமக செல்வாக்கு மிக்க வடக்கு மாவட்ட தொகுதிகளும் இருந்தன. ஆனால் அந்த இடைத்தேர்தலில் பெரும்பாலன தொகுதிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நிலையில், அதிமுகவுக்கு ஆதரவளித்தது பாமக. அப்போது விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இதில் அதிமுகவுக்கு ஆதரவளித்தது தேர்தலில் இருந்து விலகிக்கொண்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் யாருக்கும் ஆதரவளிக்காமலே ஒதுங்கியது. இந்த நிலையில் தான் 13 ஆண்டுகள் கழித்து பாமக மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது.

பின்னணி என்ன? - 2009-க்குப் பிறகு பாமகவுக்கு பெரிய வெற்றி என்பது கிடைக்கவில்லை. சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் கூட்டணி வைத்தாலும், இல்லாவிட்டாலும் தொடர் தோல்விகளே கிடைத்தன. தோல்வி பாமக தொண்டர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியுள்ளன. மேலும், பாமக செல்வாக்கு சரிந்து வருவதாக சமீபத்தில் வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகளை வைத்து பேச்சுக்கள் எழுந்தன. இதனால் பாமக தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உருவான நிலையில் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, நேற்று தைலாபுரத்தில் பாமகவின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கேற்ப, 13 ஆண்டு ‘கொள்கை’களை தளர்த்தி ''இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்றார் அன்புமணி ராமதாஸ். தற்போது கூட்டணி கட்சிகள் செவிசாய்க்க விக்கிரவண்டியில் பாமக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

இதனை உறுதிப்படுத்திடும்வகையில் பேசிய பாமக வழக்கறிஞர் பாலு, "கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஒருமித்த கருத்துடன் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் எனக் கூறினர். தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட பாமக முடிவெடுத்துள்ளது" என்று கூறினார்.

அதன்படி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என்று தமிழக பாஜக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியானது விக்கிரவாண்டி சட்டப்பேர்வைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு, சுமார் 42,000 வாக்குகளை பாமக வென்றது. இந்தத் தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் கூட விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் மட்டும் ஏறத்தாழ 32000 வாக்குகளை பெற்றது பாமக. இப்படி விக்கிரவாண்டி தொகுதியில் தங்களுக்கு இருக்கும் வாக்குவங்கியை கருத்தில் கொண்டு, செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த இடைத்தேர்தலில் போட்டியில்லை என்ற கொள்கையை தகர்த்து தற்போது 13 ஆண்டுகளுக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளது பாமக.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x