Published : 23 May 2018 08:17 AM
Last Updated : 23 May 2018 08:17 AM
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் கலவரமாக மாறியதற்கு, போதிய எண்ணிக்கையில் போலீஸார் இல்லாததும், போராட்டம் குறித்த உளவுத் துறையினர் சரியான தகவல் தராததே காரணம் எனக் கூறப்படுகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் முதன்முதலாக தொடங்கிய அ.குமரெட்டியாபுரம் கிராமம், மடத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து, காலை 9.30 மணி தொடங்கி, ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலங்கள் தனித் தனியாக வந்தன. இதுபோல், நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மீனவர்கள், தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் திரண்டனர். நேரம் செல்லச் செல்ல கூட்ட மும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
காலை 10 மணியளவில் இவர்கள் விவிடி சிக்னல் அருகே ஊர்வலமாக வந்தபோது, காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், சொற்ப எண்ணிக்கையிலான போலீஸாரே இருந்ததால், அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
காலை 10.30 மணியளவில் இந்திய உணவு கழக கிட்டங்கி அருகே ஊர்வலம் வந்தபோது, அவர்களை கட்டுப்படுத்த போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். அப்போது ஊர்வலத்தில் வந்தவர்கள், மீண்டும் கற்கள் வீசி போலீஸாரை தாக்க தொடங்கினர். அவர்களை தடுக்க முடியாமல் போலீஸார் பின்வாங்கினர்.
காலை 11.30 மணியளவில் ஊர்வலம் புறவழிச் சாலை அருகே வந்தபோது, 3 பைக்குகள் எரிக்கப்பட்டன. பகல் 12 மணியளவில் காவல்துறையி னர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்ததால் போராட்டக்காரர்கள் எளிதாக ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த னர்.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் 9 கார்கள் எரிக்கப்பட்டுள்ளன. இதில் 2 கார்கள் தனியாருக்கு சொந்தமானவை. மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அரசு ஊழியர் வாகன காப்பகம் மற்றும் வெளி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
பகல் 12.15 மணியளவில், ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பு வளாகத்துக்கு வந்த போராட்டக்காரர்கள் காவலாளி அறையை அடித்து நொறுக்கினர். பின்னர், ஜெனரேட்டர் அறைக்கு தீ வைத்தனர். பின்னர், அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 40-க்கும் மேற்பட்ட கார்கள் எரிக்கப்பட்டன. வன்முறை வெடித்ததால் 12.30 மணியளவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
போராட்டக் குழுவை சேர்ந்த சிலர் சீருடையில் இருந்த காவலர்களைத் துரத்திச் சென்று தாக் கியதால் நாலாபுறமும் அவர்கள் சிதறி ஓடினர். சில காவலர்கள் அருகில் இருந்த வீடுகள், அலுவலகங்களுக்குள் தஞ்சம் புகுந்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் போராட்டக்காரர்கள் புகுந்து ரகளை செய்தனர். அங்கு நின்றிருந்த 2 ஆம்புலன்ஸ்களை எடுக்குமாறு கூறி, அவற்றின் கண்ணாடிகளை உடைத்தனர். அதிரடிப்படை உள்ளிட்ட போலீஸார் விரைந்து வந்து அவர்களை அடித்து விரட்டினர். யாரும் ஆம்புலன்ஸ் வாகனங்களை எடுக்காததால் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்களே 2 வாகனங்களையும் எடுத்துச் சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர்.
தூத்துக்குடி - திருநெல்வேலி சாலை உட்பட பிரதான சாலைகளில் வைத்திருந்த சாலை தடுப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி வைக்கப்பட்டிருந்த அரசு திட்டங்கள் தொடர்பான பேனர்கள் கிழித்து எறியப்பட்டன. மேம்பாலத்தின் கீழ் அணுகு சாலையில் உள்ள ஊர் வழிகாட்டி பலகைகள் உடைக்கப்பட்டன. பெரியதாழையில் இருந்து திருச்செந்தூர் சென்ற நகரப் பேருந்தை மர்மநபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பேருந்தின் முன் பகுதி கண்ணாடி உடைந்தது.
மாவட்ட எஸ்பி பெ.மகேந்திரன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டக்குழுவை சேர்ந்த ஒரு பிரிவினர் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் உள்ளிட்ட சிலர் மட்டும் இதில் பங்கேற்றனர்.
போராட்டம், வன்முறையாக மாறியதற்கு போதிய போலீஸார் குவிக்கப்படாததே காரணம். இப்போராட்டம் குறித்து உளவுத் துறையினரும் உரிய தகவலைத் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தகுந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததே, போராட்டம் கலவரமாக மாறியதற்கான முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT