Last Updated : 14 Jun, 2024 02:59 PM

2  

Published : 14 Jun 2024 02:59 PM
Last Updated : 14 Jun 2024 02:59 PM

புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டணம் மீண்டும் உயர்வு 

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வீடுகளுக்கான மின் கட்டணம் மட்டும் மீண்டும் உயர்த்தப்படுகிறது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு பழைய மின் கட்டணமே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில மின்துறையின் வரவு செலவு கணக்குகள் கோவாவில் உள்ள இணை ஒழுங்கு முறை ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டு அதற்கேற்ப ஆண்டுதோறும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி 2023-24 நிதியாண்டுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பிக்க அப்போதைய துணைநிலை ஆளுநர் தமிழிசை கடந்த டிசம்பரில் ஒப்புதல் கொடுத்தார். இதையடுத்து மின்கட்டண உயர்வு தொடர்பாக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் புதுச்சேரி மின்துறை விண்ணப்பித்தது.

இதன்படி இந்த ஆண்டு வீட்டு உபயோகத்துக்கு ஒரு யூனிட்டுக்கு சராசரியாக 50 பைசா முதல் 75 பைசா வரை உயர்த்தவும், வர்த்தக பயன்பாட்டுக்கு சராசரியாக ஒரு ரூபாய் வரை கட்டணம் உயர்த்தவும் புதுச்சேரி அரசு கேட்டிருந்தது. 2024-25ம் ஆண்டுக்கான மின் கட்டண நிர்ணயம் தொடர்பான கருத்துகேட்புக் கூட்டமும் நடந்து முடிந்தது. இதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகளால் அதன் முடிவுகள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் அரசு விண்ணப்பத்தில் திருத்திய கட்டணத்துக்கு இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது. அதற்கான கோப்பு புதுச்சேரிக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளது. அதன்படி, புதுச்சேரியில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட்களுக்கான முன் கட்டணம் ரூ.2.25-ல் இருந்து ரூ. 2.75 ஆக உயர்த்த புதுச்சேரி அரசு கோரியது. அதை ரூ. 2.70 ஆக உயர்த்த அனுமதி தரப்பட்டுள்ளது. 101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் ரூ. 3.25-ல் இருந்து ரூ. 4 ஆகவும் 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு தற்போது வசூலிக்கப்படும் ரூ.5.40-ல் இருந்து ரூ. 6 ஆகவும் 301 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் விநியோகிக்கும் வீடுகளுக்கான கட்டணம் ரூ. 6.80-ல் இருந்து ரூ. 7.50 ஆகவும் உயர்த்த புதுச்சேரி அரசு கோரியதை ஆணையம் அனுமதித்துள்ளது.

வர்த்தக நிறுவனங்களுக்கு முதல் 100 யூனிட் வரை தற்போது வசூலிக்கப்படும் ரூ. 6-ல் இருந்து ரூ.6.50 ஆகவும், 101 முதல் 250 யூனிட் வரை ரூ.7.05-ல் இருந்து ரூ.8 ஆகவும், 251 யூனிட்டுக்கு மேல் ரூ. 7.80-ல் இருந்து ரூ.9 ஆகவும் கட்டணம் உயர்த்த அனுமதி கோரியிருந்தனர்.

ஆனால் அக்கட்டணத்தை உயர்த்த அனுமதி தரப்படவில்லை. பழைய கட்டணமே தொடரும். அதேசமயம் நிலைக்கட்டணம் 1 கிலோவாட் ரூ. 75-ல் இருந்து ரூ. 200 ஆக உயருகிறது. இக்கட்டண உயர்வு ஜூன் 16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x