Published : 14 Jun 2024 02:37 PM
Last Updated : 14 Jun 2024 02:37 PM

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய நிலுவை: அரசு நடவடிக்கைக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

ராமதாஸ்

சென்னை: பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அவர்களுக்கு உடனே ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட 10 கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் 116 கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக உயர்கல்வித்துறை செயலாளருக்கு அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கடிதம் எழுதியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் நிலையான பேராசிரியர்களுக்கும், உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் நிலையான ஆசிரியர்களுக்கும், சில குறிப்பிட்ட துறைகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கும் தடையின்றி வழக்கம் போல ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், சுயநிதிப் பிரிவுகளாகத் தொடங்கப்பட்ட துறைகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் தான் ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்களின் ஊதியத்தை அரசு வழங்குவதா, பல்கலைக்கழகம் வழங்குவதா? என்பதில் எழுந்துள்ள சிக்கல் தான் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததற்கு காரணம் ஆகும்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இந்த 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வந்த போது, அவற்றில் அரசின் நிதியுதவி கிடைக்காத பல பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன. அப்போது அவர்களுக்கான ஊதியம் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது.

இந்த உறுப்புக்கல்லூரிகள் சில ஆண்டுகளுக்கு முன் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட பிறகு நிலையான ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் துறைகளின் ஆசிரியர்கள் ஆகியோருக்கான ஊதியத்தை அரசே ஏற்றுக் கொண்டது. ஆனாலும், சுயநிதி பாடப்பிரிவுகளின் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழகமே தொடர்ந்து ஊதியம் வழங்கி வந்தது. இப்போது 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில், அதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அரசுக்கும், பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான மோதலில் கவுரவ விரிவுரையாளர்கள் பாதிக்கப்படக் கூடாது. கவுரவ விரிவுரையாளர்கள் அனைவரும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு அரசால் வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவானது.

ஒரு மாதத்திற்கான ஊதியத்தைக் கொண்டு அந்த மாதத்திற்கான செலவுகளையே அவர்களால் சமாளிக்க முடியாது எனும் போது, 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில் அவர்கள் எவ்வாறு குடும்பச் செலவுகளை கவனிக்க முடியும்? என்பதை அரசும், பாரதிதாசன் பல்கலைக்கழகமும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

கடந்த காலங்களில் 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றிய முருகானந்தம் என்ற கவுரவ விரிவுரையாளர் அவரது சிகிச்சைக்குக் கூட காசு இல்லாமல் தற்கொலை செய்து கொண்டது நினைவிருக்கலாம்.

மாணவர்களுக்கு கற்பித்தல் எனும் புனிதப் பணியை செய்யும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதாமாதம் தாமதமின்றி ஊதியம் வழங்கப்பட வேண்டும். பாரதிதாசன் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் பேசியோ அல்லது அரசே நிதி ஒதுக்கியோ 116 கவுரவ விரிவுரையாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். இம்மாதம் முதல் அவர்களுக்கு கடைசி வேலைநாளில் ஊதியம் வழங்கப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்”எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x