Published : 14 Jun 2024 01:38 PM
Last Updated : 14 Jun 2024 01:38 PM

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டி - அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என்று தமிழக பாஜக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக பாஜக விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10-ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியானது விக்கிரவாண்டி சட்டப்பேர்வைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் திமுகவின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவாவும், நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயாவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவும், மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி உயிரிழந்ததையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஜூன் 14) தொடங்குகிறது. வரும் 21-ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 24-ம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற வரும் 26-ம் தேதி கடைசி நாளாகும். அன்றே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, வட்ட வழங்கல்அலுவலர் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x