Published : 14 Jun 2024 12:23 PM
Last Updated : 14 Jun 2024 12:23 PM

அரசு மணல் விற்பனை நிலையங்கள் | முதல்வர் ஸ்டாலினுக்கு மோட்டார் தொழிற்சங்கத்தினர் கடிதம்

மாதிரிப் படம்

சென்னை: அரசு மணல் விற்பனை நிலையங்களை மீண்டும் இயக்க வேண்டும் என அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தமிழக முதல்வருக்கு கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் கல், மணல் பிரிவு தலைவர் எஸ்.யுவராஜ் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மணல் குவாரிகளில் 8 மாதங்களுக்கு முன்பு நடந்த அமலாக்கத்துறையின் சோதனைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் இயங்கி வந்த 17-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

பின்னர் முழுமையாக ஆன்லைன் மூலமாக மணல் வழங்கப்பட்டது. இந்த மணல் விநியோகமானது ஏற்கெனவே தனியார் ஒப்பந்ததாரர் கரை மேல் கொட்டப்பட்ட மணலை மட்டுமே லாரிகளுக்கு ஆன்லைன் மூலம் வழங்கி வந்தனர். ஆனால் அதற்கு பிறகு ஒரு பிடி மணல் கூட அரசுத் தரப்பில் ஆற்றுப் படுகையில் இருந்து கரைக்கு கொண்டுவரப்படவில்லை.

இதனால் தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக, கட்டிடப் பணியில் ஈடுபட்டுள்ள 30 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் பணி இழந்து வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர். எனவே, அரசே நேரடியாக மணல் வழங்க வேண்டும்.

இதில் ஒப்பந்ததாரர் என்னும் மூன்றாம் நபர் தலையீடு இல்லாமல் அந்தந்த ஆற்றுப் படுகையில் உள்ள கிராம ஊராட்சி மக்கள் முன்னிலையில் விவசாயிகளின் டிராக்டர் மூலம் ஆற்றிலிருந்து மணலை கரைக்கு கொண்டு வந்து, லாரிகளுக்கு லோடிங் வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் ஆறுகளில் நிலத்தடி நீர் பாதிப்பு இருக்காது.

எனவே, மதுரை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மூன்றாம் நபர் தலையீடு இல்லாமல் மணல் வழங்கினால் அரசுக்கு அவப்பெயர் இல்லாமல் இருக்கும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது. அதன்படி, தடையின்றி மணல் கிடைக்கும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அரசு மணல் விற்பனை நிலையங்களை மீண்டும் இயக்க வேண்டும்.

இணையதள பதிவு செய்த லாரிகளுக்கு மட்டுமே அரசு அறிவித்த விலைக்கே மணல் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x