Published : 14 Jun 2024 09:20 AM
Last Updated : 14 Jun 2024 09:20 AM

சென்னையில் பயணிகள் வசதிக்காக 28 மெட்ரோ ரயில்கள் கொள்முதல்: நிதி ஆயோக் ஒப்புதல்

சென்னை: மெட்ரோ ரயில்களில் நெரிசலைக் குறைக்கும் வகையில், ரூ.2,820 கோடியில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்களைக் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு நிதி ஆயோக் ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னையில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் வரையும் மொத்தம் 54 கி.மீ. தொலைவுக்கு தலா 4 பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில்களில் தினசரி 2.70 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், மெட்ரோ ரயில்களின் சேவை கூடுதலாகத் தேவைப்படுகிறது. எனவே,மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கையை உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கிடையில், இரு வழித்தடங்களில் பயணிகள் வசதிக்காக, மெட்ரோ ரயில் பெட்டிகள் எண்ணிக்கையை 4-ல் இருந்து 6-ஆக உயர்த்தவும், 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்களைக் கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக ஆய்வு செய்து, அறிக்கையும் தயாரிக்கப்பட்டது.

இதையடுத்து, 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்கள் வாங்கஒப்புதல் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை மெட்ரோ ரயில்நிறுவனம் கடந்த ஆண்டு கருத்துருஅனுப்பியது. இதற்கு தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தது.

இதைத் தொடர்ந்து, 2028-ம்ஆண்டின் உத்தேச பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கூடுதலாக தேவைப்படும் ரயில்பெட்டிகளைக் கணக்கிட்டு, ரூ.2,820.90 கோடி மதிப்பில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதற்காக, பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி பெறப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட திட்டத்துக்காக, 28 கூடுதல் மெட்ரோ ரயில்களை வாங்க, நிதி ஆயோக் ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

முதல் கட்டம், முதல்கட்ட நீட்டிப்பு மெட்ரோ ரயில் திட்டத்தில் 54 கிமீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்குவதற்காக, கூடுதல் ரயில்களை வாங்குவதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அடுத்து, திட்டத்தின் கருத்துரு மத்திய பொருளாதார விவகாரத் துறைமற்றும் நிதித் துறைக்கு அனுப்பப்படும். அவர்கள் சிபாரிசு செய்தால், சர்வதேச வங்கிகளிடம் இருந்து கடன் உதவி பெறலாம்.

இப்போது, நிதி ஆயோக் ஒப்புதல் அளித்துள்ளதால், நிதித் துறைமற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை அடுத்த மாதம் ஒப்புதல்அளிக்கும் என்று நம்புகிறோம். அதன் பிறகு, நிதியுதவிக்கான திட்டம் வெளியிடப்படும். இந்த மெட்ரோ ரயில்களை தயாரித்து பெறுவதற்கு 2 ஆண்டுகள் வரை ஆகும் என்று அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x
News Hub
Icon