Published : 14 Jun 2024 09:04 AM
Last Updated : 14 Jun 2024 09:04 AM
சென்னை: சென்னையில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆன நிலையில், முதல் முறையாக அம்மா உணவகங்களை மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மாநகராட்சி சார்பில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் அம்மா உணவகங்கள் கடந்த 2013-16 காலகட்டத்தில் திறக்கப்பட்டன. தற்போது 399 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஒரு இட்லி ரூ.1, சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கலவை சாதம் போன்றவை ரூ.5, 2 சப்பாத்தி ரூ.3என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில்பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த அம்மா உணவகங்கள் செயல்படும் கட்டிடங்கள் இது நாள்வரை குறிப்பிடும்படியாக பராமரிப்பு செய்யாமல் பாழடைந்து இருந்தது. பல கட்டிடங்களின் உள் பகுதியில் சமையல் ஆவி, எண்ணெய் படிந்து சுவர்கள் அசுத்தமாக உள்ளன. பல இடங்களில் வெளிச்சமின்றி, போதிய மின் விளக்குகள் இல்லாமலும் உள்ளன. பொதுமக்கள் உண்பதற்கான மேசைகளின் கால்கள்உடைந்துள்ளன. இதனால் அங்கு உணவு அருந்த வருவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
இந்நிலையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு, அம்மா உணவகங்களின் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. கட்டிடங்களில் உள்ள விரிசல்களை சரி செய்வது, சுவர்களுக்கு வண்ணம் பூசுவது, முறையான கழிவுநீர் கட்டமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
மேலும் 2013-ல் வாங்கப்பட்ட குளிர்சாதன பெட்டி, கிரைண்டர், மிக்சிபோன்றவை பழுதாகி கிடக்கும் நிலையில் அவற்றுக்கு பதிலாக புதியதாக வாங்கி கொடுக்கவும் திடடமிட்டுள்ளது. சுமார் ரூ.5 கோடி செலவில் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT