Published : 14 Jun 2024 04:51 AM
Last Updated : 14 Jun 2024 04:51 AM

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆளுநர், தலைவர்கள் இரங்கல்

சென்னை: குவைத் நாட்டில் நடைபெற்ற தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் ஆர்.என்.ரவி: குவைத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகி இருப்பது மிகுந்த வேதனைஅளிக்கிறது. தங்களது அன்புக்குரியவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: குவைத் நாட்டில் நடந்ததீ விபத்தில் சிக்கி 50-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்தம்சொந்த ஊர்களுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை தூதரக உதவியுடன் மத்திய, மாநில அரசுகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: குவைத் நாட்டின் மாங்காப் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில்7 தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் உயிரிழந்த செய்திஅறிந்து துயரமும், மனவேதனையும் அடைந்தேன். தீ விபத்தில்உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: குவைத் நாட்டில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யவும், உயிரிழந்தோர் உடல்களை தாய்நாட்டுக்கு கொண்டுவரவும் மத்திய வெளியுறவுத் துறை துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்: குவைத் நாட்டில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகம், கேரளாவைச் சேர்ந்தவர்கள் உள்பட இந்தியர்கள் பலர் உயிரிழந்த செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன்.

மதிமுக முதன்மை செயலாளர்துரை வைகோ: குவைத் நாட்டில்ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர்இந்தியர்கள் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய அரசு விரைந்து செயல்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை அவரவர் ஊருக்குக் கொண்டுவர தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவாக தலைவர் தி.வேல்முருகன், வி.கே.சசிகலா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x