Published : 14 Jun 2024 04:54 AM
Last Updated : 14 Jun 2024 04:54 AM
சென்னை: தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு வழங்கப்பட்ட அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு பெற்று இயங்கும்ஆம்னி பேருந்துகள், பயணிகள்பேருந்துகள் போல் செயல்படுகின்றன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, தமிழகத்தில் இயக்கப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியது.
இதற்காக 3 முறை அவகாசம் வழங்கியபோதிலும், 652 பேருந்துகளில் 547 பேருந்துகள் ‘டிஎன்’எனப்படும் வாகனப் பதிவெண்ணை பெறவில்லை. எனவே, உரிய தமிழக பதிவெண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள ஆம்னிபேருந்துகள் இன்று (ஜூன் 14) நள்ளிரவு முதல் இயங்க போக்குவரத்துத் துறை ஆணையர் தடை விதித்தார். மேலும், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் இனி பயணம் செய்வதை பயணிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், ஆம்னி பேருந்துஉரிமையாளர்கள் சங்கத்தினர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: வெளி மாநில பதிவுபெற்ற ஆம்னி பேருந்துகள் ஜூன் 14-ம்தேதி முதல் தமிழகத்தில் இயக்குவதற்கு மாநில அரசு தடை விதித்திருந்தது. இது தொடர்பாக போக்குவரத்து ஆணையர்தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் காலஅவகாசம் வழங்க மறுக்கப்பட்டது. பிறகுபோக்குவரத்து துறை அமைச்சரைச் சந்தித்து கால அவகாசம்கேட்டோம்.
இதையடுத்து, போக்குவரத்துத் துறை ஆணையரும், அமைச்சரும் பரிசீலனை செய்து தொடர் விடுமுறை காரணமாக பயணிகளின் நலன் கருதி ஜூன் 18-ம் தேதி(செவ்வாய்) காலை வரை தமிழகத்தில் வெளி மாநில பேருந்துகளை இயக்க அனுமதி அளித்துள்ளனர். இதற்காக போக்குவரத்து துறை அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT