Published : 14 Jun 2024 07:49 AM
Last Updated : 14 Jun 2024 07:49 AM

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவும், மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி உயிரிழந்ததையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கான வேட்புமனு தாக்கல்இன்று (ஜூன் 14) தொடங்குகிறது. வரும் 21-ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 24-ம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்ப பெற வரும் 26-ம் தேதி கடைசி நாளாகும். அன்றே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, வட்ட வழங்கல்அலுவலர் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள திமுக கூட்டணி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தலை கருது கிறது.

திமுக வேட்பாளராக மாநில விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், தேர்தல் பணிக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்று, தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்துகின்றனர். அதிமுக தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்தஅறிவிப்பு நாளை வெளியாகும்என்று தெரிகிறது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.

இன்று அஷ்டமி என்பதால் யாரும் வேட்பு மனுவைப் பெறவோ, தாக்கல் செய்யவோ வர மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. வார இறுதி விடுமுறை மற்றும் திங்கள்கிழமை பக்ரீத் விடுமுறை கழிந்து, செவ்வாய்க்கிழமை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாமக போட்டியா? - பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் கோ.க.மணி, மாநில நிர்வாகிகள் வடிவேல் ராவணன், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ திருக்கைச்சூர் ஆறுமுகம், முன்னாள் பொதுச் செயலாளர் தீரன்,வன்னியர் சங்க மாநிலத் தலைவர்பூ.தா.அருள்மொழி, முன்னாள் எம்.பி. மருத்துவர் செந்தில், வழக்கறிஞர் பாலு, பாமக மாநிலப் பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் கலந்துகொண்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி, “விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து நிர்வாகக் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவெடுத்த பின்னர், அறிவிக்கப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x