Last Updated : 21 May, 2018 09:31 AM

 

Published : 21 May 2018 09:31 AM
Last Updated : 21 May 2018 09:31 AM

சோழவரத்தில் புதிதாக கட்டப்பட்டு 2 ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராத ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்

சோழவரத்தில் புதிதாக கட்டப்பட்டு 2 ஆண்டுகளாகியும் செயல்பாட்டுக்கு வராத ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், புதர்களால் சூழப்பட்டு பயன்பாடற்று உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சோழவரம், காரனோடை, சோத்துபெரும்பேடு, எருமைவெட்டிப்பாளையம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமமக்களின் மருத்துவ தேவைகளுக்காக சோழவரத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், கட்டி 2 ஆண்டுகளாகியும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.

இதுகுறித்து, சோழவரம் ஊராட்சி பகுதியில் வசிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ஏ.நடராஜன் தெரிவித்ததாவது:

சோழவரம், காரனோடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களில் பெரும்பாலோர் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள். இவர்கள், தங்களின் அத்தியாவசிய மருத்துவ தேவைகளுக்கு சுமார் 6 கிமீ தொலைவில் உள்ள பஞ்செட்டி மற்றும் பாடியநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது.

இதனால் எங்கள் பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரி வந்தோம். அதன் விளைவாக, சோழவரத்தில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, திருவள்ளூர் எம்பி டாக்டர் வேணுகோபாலின் தொகுதி மேம்பாட்டு நிதியில் சுமார் ரூ.40 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், அது இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால், ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் புதர் மண்டி பயன்பாடற்ற நிலையில் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் புகலிடமாகவும், மது அருந்தும் இடமாகவும் மாறி வருகிறது. இனியாவது இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சோழவரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறும்போது, “திருவள்ளூர் எம்பி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து, சம்பந்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை துரிதமாக எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x