Published : 13 Jun 2024 05:08 PM
Last Updated : 13 Jun 2024 05:08 PM

கிளாம்பாக்கம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைப்பு சாத்தியங்களை ஆராய குழு: அமைச்சர் தகவல்

 கிளாம்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பாக அமைச்சர் அன்பரசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான வழிகளை கண்டறிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், 10 நாளில் அறிக்கை அளிக்க அந்தக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.

வெளியூர் பேருந்துகள் இயக்கப்படும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் முன்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் வியாழக்கிழமை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை வார விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.‌ இதை சரி செய்ய வேண்டுமென அனைத்து துறை அதிகாரிகளுடன் இன்றைய தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை தருவதற்காக தற்போது குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் தரும் அறிக்கையை வைத்து அதற்கு ஏற்றவாறு பணிகளை செய்ய தயாராக உள்ளோம். குழுவினரிடமிருந்து 10 நாட்களுக்குள் அறிக்கை வாங்கப்பட்டு, அந்த அறிக்கையின் அடிப்படையில் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். வண்டலூர் முதல் காட்டாங்குளத்தூர் வரை மேம்பாலம் அமைக்கும் பணி தொடர்பான அறிவிப்பு நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வெளியாகும். அதேபோன்று சாலை விரிவாக்கப் பணியின்போது அகற்றப்பட்ட பேருந்து நிறுத்தங்களை எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x