Last Updated : 13 Jun, 2024 04:57 PM

 

Published : 13 Jun 2024 04:57 PM
Last Updated : 13 Jun 2024 04:57 PM

காயாமொழி ஊராட்சி தலைவர் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை: மீண்டும் ராஜேஸ்வரனே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து காயாமொழி ஊராட்சி தலைவர் தேர்தலுக்கான மறுவாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிம் காயாமொழி ஊராட்சித் தலைவர் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ராஜேஸ்வரனே மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

காயாமொழி ஊராட்சித் தலைவர் பதவிக்கு கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு ராஜேஸ்வரன் மற்றும் முரளிமனோகர் உள்ளிட்ட 8 பேர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் மொத்தம் 3,088 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. இதில் ராஜேஸ்வரன் 1,071 வாக்குகளும், முரளிமனோகர் 1,070 வாக்குகளும் பெற்றனர். இதனால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ராஜேஸ்வரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தாக கூறி மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என முரளிமனோகர் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து மறுவாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ராஜேஸ்வரன் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கில் ஒரு மாத காலத்துக்குள் மறுவாக்கு எண்ணிக்கை நடந்த வேண்டும் என உயர் நீதிமன்ற கிளையும் உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து காயாமொழி ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கான மறுவாக்கு எண்ணிக்கை கடந்த ஏப்ரல் 4-ம் தேதி நடப்பதாக இருந்த நிலையில், மக்களவை தேர்தல் விதிமுறை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து காயாமொழி ஊராட்சித் தலைவர் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான ஆன்றோ தலைமையில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், ராஜேஸ்வரன் 1,069 வாக்குகளும், முரளிமனோகர் 1,068 வாக்குகளும் பெற்றனர். 105 செல்லாதவை ஆகும். இதையடுத்து மீண்டும் ராஜேஸ்வரன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மறுவாக்கு எண்ணிக்கையிலும் முறைகேடு நடந்ததாக முரளிமனோகர் தரப்பினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். மறுவாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x