Published : 13 Jun 2024 02:48 PM
Last Updated : 13 Jun 2024 02:48 PM
ஓசூர்: ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னஎலசகிரி அம்பேத்கர் நகர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் 13 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னஎலசகிரியில் உள்ள அம்பேக்கர் நகர் குடியிருப்பு பகுதியில் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் உள்ள ஏரியில் ஆழ்த்துளை கிணறு அமைத்து வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர்வினியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கமாக தண்ணீர் வழங்கப்பட்டதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், இரவு முதல் அப்பகுதியில் உள்ள ஒரு சிலருக்கு திடிரென வாந்தி,மயக்கம், வயிற்றுவலி, வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மேலும் சிலருக்கு இதே போல் உடல் உபாதைகள் ஏற்பட்டதால், இன்று காலை ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிக்சைக்காக அழைத்துவரப்பட்டனர். இதில் மஞ்சுளா (34) எல்லம்மா (66), முனிதாயம்மா (77), ராமகிருஷ்ணன்,கோபால் (35),அஸ்வினி (14) உள்ளிட்ட 8 பேர் ஓசூர் அரசு மருத்துவமனையிலும், 5 பேர் தனியார் மருத்துவமனையிலும் என 13 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
உதவி ஆட்சியர் பிரியங்கா, மேயர் சத்யா, ஆணையாளர் சினேகா ஆகியோர் மருத்துவமனையில் சிச்சைப்பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியும், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். மாநகர நல அலுவலர் பிரபாகரன் தலைமையில் மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மருத்துவ முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
மேலும் உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு தண்ணீரில் கழிவு நீரில் கலந்துள்ளதா, அல்லது தொழிற்சாலை கழிவு நீரா வேறு காரணமா என சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல் டிஎஸ்பி பாபுபிரசாந்த் மற்றும் சிப்காட் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து மேயர் சத்யா கூறும்போது, "அம்பேத்நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள மக்களுக்கு திடிரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. குடிநீரில் கழிவு நீர் கலந்துள்ளதா, அல்லது அருகே உள்ள தொழிற்சாலை கழிவு நீரா என தண்ணீரை ஆய்வுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. இதற்கு பின் தான் நடவடிக்கை எடுப்படும். மேலும் அம்பேத்கர் நகரில் 25 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்" என கூறினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT