Published : 13 Jun 2024 02:23 PM
Last Updated : 13 Jun 2024 02:23 PM
கடலூர்: நேரு நகர் மக்கள் தங்கள் குடியிருப்புகளை பாதுகாக்க வலியுறுத்தி சிதம்பரம் சார்-ஆட்சியர் ராஷ்மி ராணியிடம் கண்ணீருடன் மனு அளித்தனர்.
அந்த மனுவில், “நாங்கள் சிதம்பரம் நகராட்சி 33-வது வார்டில் உள்ள நேரு நகரில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இப்பகுதியில் 55 வீடுகள் உள்ளன. நேரு நகர் முகவரியில் தான் எங்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மின் கட்டண அட்டை, வரி ரசீது ஆகியவை இருக்கிறது. நாங்கள் இருக்கும் இடம் மடங்களுக்கு சொந்தமானதாகும். மருத்துவமணையும் மேற்கண்ட மடங்களில் இடங்களில்தான் உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்றைய மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கடந்த 10.09.2022 அன்று சிதம்பரம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தார்கள். மருத்துவமனை விரிவாக்கம் செய்ய வேண்டி உள்ளதால் மருத்துவமனை இடத்தை முழுமையாக உறுதி செய்ய தலைமை குடிமை மருத்துவ அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அதனடிப்படையில் மருத்துவமணை வளாகத்துக்குள் கட்டிடங்கள் கட்டும் பணியும், மருத்துவமணை விரிவாக்கம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் இது குறித்து பொது நல வழக்கு தொடர்ந் ஒரு நபர் ஏழைகள் பயன்படுத்தும் அரசு மருத்துவமனையின் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பால் விரிவாக்கம் தடைபெறுகிறது என பொய்யான தகவலை கொடுத்துள்ளார். தங்கள் வீடுகள் மருத்துவமனை இடத்தில் இருப்பது போல ஏமாற்றி, எங்கள் வீடுகளை இடிக்க ஏற்பாடு செய்து வருகிறார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் உண்மை நிலையை மறைத்து இந்தப் பகுதியை பற்றி அறியாத ஒரு தனி நபர் போட்ட பொதுநல வழக்கால் சென்னை உயர் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர், சார் - ஆட்சியர், வருவாய் வட்டாட்சியர் தலைமை குடிமை மருத்துவ அலுவலர் அரசு மருத்துவமனை, செயற்பொறியாளர் பொதுப்பணித் துறை (கட்டிடங்கள்) கடலூர் ஆகியோரிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.
எனவே, மருத்துவமணைக்கு எந்த விதத்திலும் தொந்தரவு இல்லாமல், மருத்துவமணை சுற்று சுவருக்கு வெளியே பல்லாண்டு காலம் வாழும் எங்கள் வீடுகளை பாதுகாத்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது, சிதம்பரம் நகர மன்ற தலைவர் முத்துக்குமரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு. நகர செயலாளர் ராஜா ஆகியோர் நேரு நகர் பகுதி மக்களுடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT