Published : 13 Jun 2024 01:24 PM
Last Updated : 13 Jun 2024 01:24 PM
புதுச்சேரி: ஹைட்ரஜன் சல்பேட் விஷவாயு பரவிய புதுநகரிலுள்ள தெருவில் வீட்டு கழிவறை குழாய்களை பொதுப் பணித் துறை ஆய்வு செய்து, தெருவைத் தோண்டி சரியான முறையில் இணைப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகரில் ஹைட்ரஜன் சல்பேட் விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். அதையடுத்து இப்பகுதி அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கனகன் ஏரி பகுதியில் கழிவுநீர் கலப்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க வருவாய்த்துறை, பொதுப்பணித்துறைக்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினரும் பொதுப்பணித்துறையினரும் அப்பகுதியில் விசாரணை நடத்தினர். விபத்து நடந்த பகுதிக்கு அருகேயுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கழிவுநீர் எங்கிருந்து வருகிறது, அங்கு நடக்கும் சுத்திகரிப்பு பணி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வெளியேற்றும் பணி ஆகியவை தொடர்பாக ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில், இக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முழுமையாக பொதுப்பணித்துறையே இன்று முதல் கையாள உள்ளது. புதுநகரில் விஷவாயுவால் பெண்கள் உயிரிழந்த தெருவில் வீடுகளில் கழிவுநீர் குழாய்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதையடுத்து வீடுகளில் முறையாக பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்படாமலும் எஸ்டிராப் வைக்காததும்தான் விஷவாயு கழிவறைக்கு வந்ததற்கு காரணம் என தெரிந்தது.
மேலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தால் எப்பிரச்சினையும் இல்லை. வீட்டுக் கழிவறையில் பைப்லைன் சரியாக அமைக்காததால் காற்று வெற்றிடம் ஏற்பட்டு ஹைட்ரஜன் சல்பேட் வாயு பரவி உயிரிழப்புகள் நடந்துள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுநகரில் விஷ வாயு கசிவு ஏற்பட்ட தெரு தொடங்கி அப்பகுதியிலுள்ள அனைத்து தெருக்களிலும் வீடுகளில் கழிவுநீர் பைப் லைன் சரியாக உள்ளதா என்பதை இன்று முதல் பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
இதுபற்றி பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் வைத்தியநாதன் நம்மிடம் பேசுகையில், “தெருக்களை ஆய்வு செய்ததில் வீட்டு கழிவறையில் இருந்து பாதாள சாக்கடைக்கு தரும் இணைப்பு சரியாக தரவில்லை என்பது தெரியவந்தது. கழிவறையில் இருந்து நேரடியாக சென்று பாதாள சாக்கடையில் இணைத்துள்ளனர். அதனால் கழிவறையில் இருந்து பாதாள சாக்கடைக்கு முறையாக இணைப்பு தரும் பணிகளை தொடங்கியுள்ளோம்.
இதற்கான முழு செலவை அரசே ஏற்கவுள்ளது. பணி முடிந்த பிறகுதான் திட்டத்துக்கான செலவு தெரியும். ஏனெனில் வால்வு, குழாய்கள், தொட்டி ஆகியவை ஒவ்வொரு வீட்டுக்கும் மாறுபடும். விஷவாயு கசிவால் உயிரிழப்பு நடந்த தெருவில் இந்தப் பணிகள் இன்றைக்குள் முடியும். அதன் பிறகு ஒரு நாள் கழித்து அந்தத் தெருவில் உள்ள வீடுகளில் கழிவறைகளை பயன்படுத்தலாம். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆறு தெருக்களிலும் பணிகள் நடக்கும். இப்பணி முழுமையாக முடிய ஒரு மாதம் ஆகும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT