Published : 13 Jun 2024 12:58 PM
Last Updated : 13 Jun 2024 12:58 PM
புதுச்சேரி: ஹைட்ரஜன் சல்பேட் விஷவாயு தாக்கிய ரெட்டியார்பாளையம் புதுநகரில் கழிவறைக்குச் சென்ற ஒரு பெண் இன்று மயக்கம் அடைந்தார். இதையடுத்து, மருத்துவக் குழுவினர் அப்பகுதி மக்களை பரிசோதித்ததில் பலருக்கும் ரத்த அழுத்தம் அதிகளவில் அதிகரித்திருந்ததால் சிகிச்சை தரப்பட்டது.
புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகரில் நேற்று முன்தினம் கழிவறையில் இருந்து ஹைட்ரஜன் சல்பேட் விஷ வாயு பரவியதால் புதுநகர் 4-வது தெருவைச் சேர்ந்த செந்தாமரை, அவரின் மகள் காமாட்சி மற்றும் பள்ளி மாணவி செல்வராணி ஆகியோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர். மேலும், 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். அரசு ஆரம்ப பள்ளி அருகே தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியின் முடிவில் கனகன் ஏரி கரையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுப்பணித் துறையை கையாள உள்ளது.
இந்நிலையில், 4-வது தெருவில் உள்ள மேன்ஹோல்கள் வழியாக விஷ வாயு பரவியது கண்டறியப்பட்டதால் பொதுப்பணித்துறையினர் மேன்ஹோல்கள் மூடிகளை அகற்றியுள்ளனர். இந்த நிலையில் இன்று 4-வது தெருவில் வசிக்கும் புஷ்பராணி (38) கழிவறைக்குச் சென்றபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் சாலைகளில் நின்றதால் போலீஸாரும் குவிக்கப்பட்டனர். உடனடியாக அப்பகுதிக்கு மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு பொதுமக்களை பரிசோதிக்க தொடங்கினர்.
அப்போது, ஏராளமானோருக்கு ரத்த அழுத்தம் அதிகளவில் அதிகரித்திருந்தது. பலரும் ரத்த அழுத்தத்துடன் மூச்சு விட சிரமமாக இருப்பதால் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனிடையே, மருத்துவ சோதனையின்போது ரத்த அழுத்தம் அதிகரிப்பு மற்றும் மூச்சு விட சிரமமாக இருந்ததாகச் சொல்லி பூமகள் (52), சுலோச்சனா (60), மாரிச்செல்வம் (69) ஆகியோரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பினர்.
ஜூன் 17 வரை விடுமுறை நீட்டிப்பு: புதுநகர் பகுதியிலுள்ள இரு பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. புதுநகர் 6-வது தெருவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு இன்று காலை ஆசிரியர்கள் வந்திருந்தனர். மாணவர்களும் வந்திருந்தனர். ஆனால், கல்வித் துறையிலிருந்து வந்த தகவலை தொடர்ந்து அந்தப் பள்ளிக்கு விடுமுறை வரும் 17வரை நீட்டிக்கப்பட்டது. அதேபோல அதே பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியான இமாகுலேட் பள்ளிக்கும் ஜூன் 17 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT