Published : 13 Jun 2024 12:41 PM
Last Updated : 13 Jun 2024 12:41 PM
சென்னை: “முதல்வர் ஸ்டாலின் தனது கூட்டணி நலனுக்காக தமிழக விவசாயிகள் நலனைப் புறக்கணிப்பதை நிறுத்திக் கொண்டு உடனடியாக காவிரி நீரில் தமிழகத்தின் பங்கைப் பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டெல்டா குறுவை சாகுபடிக்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசை கண்டித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காவிரி நீரில், கடந்த ஆண்டு கிடைக்கப் பெற்ற தண்ணீரின் அளவு 81.4 டிஎம்சி மட்டுமே. ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் பெற்றிருக்க வேண்டிய தமிழகம், அதில் பாதி அளவைக் கூட பெறவில்லை என்பது, திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது.
திமுக, காங்கிரஸ் சந்தர்ப்பவாத இண்டியா கூட்டணியின் நலனுக்காக, தமிழக விவசாயிகளின் நலனை மொத்தமாக அடகு வைத்திருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். காவிரியில் குறித்த அளவு நீர்வரத்து இல்லாததால், இந்த ஆண்டு ஜூன் 12 அன்று, விவசாயத்துக்காகத் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை திறக்கப்படாமல், பாசனத்துக்கு நீர் இன்றி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனால், முதல்வர் ஸ்டாலினுக்கு இது குறித்த எந்தக் கவலையும் இல்லை. தன்னை ஒரு டெல்டாக்காரன் என்று கூறிவிட்டு, வயலில் கான்கிரீட் சாலை அமைத்து நடக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, விவசாயிகள் வேதனை எப்படிப் புரியும்? முதல்வர் ஸ்டாலின், தனது கூட்டணி நலனுக்காக, தமிழக விவசாயிகள் நலனைப் புறக்கணிப்பதை நிறுத்திக் கொண்டு, உடனடியாக, காவிரி நீரில் தமிழகத்தின் பங்கைப் பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT