Published : 13 Jun 2024 04:24 AM
Last Updated : 13 Jun 2024 04:24 AM

ஜூன் 20 முதல் 29 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டம்: காலை - மாலை இரு வேளையும் மானிய கோரிக்கை விவாதம்

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறுவதாக அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை - மாலை என இரு வேளையும் கூட்டம் நடத்தப்பட்டு 16 அமர்வுகளில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 15-ம் தேதி வரை நடைபெற்றது. நிறைவு நாளில் விவாதத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார். இதையடுத்து, 2024-25 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் 19, 20-ம் தேதிகளில் தாக்கல் செய்யப்பட்டன. பட்ஜெட்கள் மீதான விவாதம் 22-ம் தேதி வரை நடைபெற்றது. நிறைவாக, விவாதத்துக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலளித்தனர்.

இதையடுத்து, மக்களவை தேர்தல் காரணமாக, மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதம் நடத்தப்படாமல், பேரவை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

மக்களவை தேர்தல் முடிந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 24-ம் தேதி தொடங்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்திருந்தார்.

இதற்கிடையே, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 24-ம் தேதிக்கு பதிலாக, முன்கூட்டியே 20-ம் தேதி தொடங்கும் என்று அப்பாவு அறிவித்தார்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஜூன் 29 வரை நடத்துவதாக இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து அப்பாவு கூறியதாவது: சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 20-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறும். மறைந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு 20-ம் தேதி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, அன்றைய தினம் பேரவை ஒத்திவைக்கப்படும். 21-ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடும்.

வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கும் பேரவை நிகழ்வுகளை காலை 9.30 மணிக்கு தொடங்க, விதிகள் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 21-ம்தேதி பேரவை கூடியதும் இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும். 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை காலை 9.30 மணிக்கு பேரவை கூட்டம் தொடங்கும். 29-ம் தேதி தவிர மற்ற நாட்களில் காலை 9.30 முதல் மதியம் 1.30 மணி வரை மற்றும் மாலை 5 முதல் இரவு 8 மணி வரை என 2 பிரிவுகளாக கூட்டம் நடைபெறும். அதாவது மொத்தம் 16 அமர்வுகளாக பேரவை கூட்டம் நடத்தப்பட்டு, மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவித்ததால்தான் கூட்டத்தொடரை 4 நாட்கள் முன்னதாகவே தொடங்கிகாலை, மாலை என இரு வேளையும் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மானிய கோரிக்கை விவாதம் 8 நாட்கள் மட்டும்தானா என கேள்வி எழுப்பப்படுகிறது. 2004-ம் ஆண்டு இதுபோன்ற ஒரு சூழலில் இங்கு வெறும் 6 நாட்கள் மட்டுமே மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘குறைந்தபட்சம் 45-50 நாட்களாவது கூட்டத்தொடர் நடத்தப்படும். 8 நாட்கள் மட்டுமே நடத்தப்படுவது வருந்தத்தக்கது’’ என்றார்.

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பர்ட் பதவியேற்பு

விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட் பதவியேற்று கொண்டார். அவருக்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

எம்எல்ஏ பதவியை விஜயதரணி ராஜினாமா செய்ததால், மக்களவை தேர்தலுடன், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை தலைவர் அறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எம்எல்ஏவாக தாரகை கத்பர்ட் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், ராஜகண்ணப்பன் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய்வசந்த், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரூபி மனோகரன், அசன் மவுலானா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ‘‘கடந்த 2021 தேர்தலில் 27 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் விஜயதரணி வெற்றிபெற்றார். இந்த இடைத்தேர்தலில் தாரகை கத்பர்ட் 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். வெற்றிக்கு காரணமாக இருந்த முதல்வர் ஸ்டாலின், தோழமை கட்சிகள், வாக்காளர்களுக்கு நன்றி’’ என்றார். தாரகை கத்பர்ட் கூறியபோது, ‘‘காமராஜர் ஆட்சியில் கொண்டு வந்த கோதையாறு அணையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும். விளவங்கோடு தொகுதியில் மக்களின் அத்தியாவசிய தேவையான சாலை, குடிநீர் மின்சார வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க பாடுபடுவேன்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x