Published : 13 Jun 2024 08:50 AM
Last Updated : 13 Jun 2024 08:50 AM
சென்னை: கோயில் பூசாரியால் 25-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டதையடுத்து, அவருக்கு ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயில் பூசாரியான கார்த்திக் முனுசாமி தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக, சாலிகிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கடந்த மே 28 அன்று கார்த்திக் முனுசாமியைக் கைது செய்தனர்.
இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி கார்த்தி்க் முனுசாமி தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நடந்தது.
அப்போது போலீஸார் தரப்பில் ஆஜரான மாநகர அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், மனுதாரரின் வீட்டுக்கு வந்த முக்கிய பிரமுகருடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென புகார் அளித்த இளம்பெண்ணை மனுதாரர் மிரட்டியுள்ளார். அதற்கு புகார்தாரர் மறுத்துள்ளார். இதனால் பெரிய அளவில் பணம் கிடைப்பது தடைபட்டு விட்டது என புகார் தாரரை திட்டியுள்ளார்.
வெளிநாட்டுக்கு தப்பி விடுவார்: புகார்தாரருடன் மனுதாரர் பலமுறை உறவு வைத்துள்ளார். மனுதாரர் வற்புறுத்தி அவரை கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார். மனுதாரரின் செல்போனை புகார்தாரர் ஆராய்ந்தபோது தன்னைப்போல 25-க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஆபாச புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அதன்பிறகே புகார் அளித்துள்ளார்.
பல பெண்களி்ன் ஆபாச படங்களை பல முக்கிய பிரமுகர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். எனவே இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. கோயில் பூசாரியான அவருக்கு ஜாமீன் வழங்கினால் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிடுவார் என கடுமையாக ஆட் சேபம் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்படுவதாகவும், இந்த வழக்கில் புகார் அளித்த பெண் தனக்கு ஜாமீன் வழங்க எந்த ஆட்சேபமும் இல்லை என தெரிவித்துள்ளதாகவும் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.அல்லி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘கோயில் பூசாரியான மனுதாரர் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் ஒன்றும் அப்பாவி அல்ல. கோயில்களுக்கு மன நிம்மதி தேடிச் செல்லும் இளம்பெண்களை இவர் வேறு மோசமான கண்ணோட்டத்துடன் அணுகியுள்ளார்.
பொதுவாக, பொதுமக்கள் கடவுளுக்கு அடுத்தபடியாக கோயிலில் பூஜை, புனஸ்காரங்களை மேற்கொள்ளும் குருக்கள் மற்றும் பூசாரிகள் மீதுதான் அதிகளவில் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை இவர் தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளார்.
களங்கம் ஏற்படுத்தியுள்ளார்: தனது தீய நோக்கத்துக்கு புகார்தாரரைப் பயன்படுத்தியுள் ளார். இதன் மூலம் கோயிலில் தான் செய்து வந்த புனிதமான பணிக்கும், கோயிலுக்கும் மனுதாரர் களங்கம் ஏற்படுத்தியுள்ளார். இவரின் அற்பத்தனமான நடவடிக்கையால் 25-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறுவதால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது’’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT