Last Updated : 12 Jun, 2024 05:06 PM

 

Published : 12 Jun 2024 05:06 PM
Last Updated : 12 Jun 2024 05:06 PM

முடிவுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம் - கடலுக்குச் செல்ல மீனவர்கள் ஆயத்தம்

மீன்பிடித் தடைக்காலம் நாளை மறுநாளுடன் நிறைவடைவதை முன்னிட்டு, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் இன்று ஐஸ் கட்டிகளை ஏற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். படங்கள்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதனால், அடுத்த வாரம் முதல் மீன்களின் விலை குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக் காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. இந்த தடைக்காலம் நாளை மறுநாளுடன் (14-ம் தேதி) நிறைவடைகிறது. இந்தத் தடை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டன.

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்பிடி படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன. மீன்பிடி தடைக் காலத்தின் போது மீன்பிடித் தொழில் முற்றிலுமாக தடைபட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் வீதம் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகள், மீன் பிடி உபகரணங்களை சீரமைத்தனர். தடைக் காலம் நாளை மறுநாளுடன் முடிவடைவதால், மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் படகுகளில் ஐஸ் கட்டிகள், டீசல், உணவுப் பொருட்கள், குடிநீர், மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை ஏற்றும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், சில மீனவர்கள் தங்களது படகுகளுக்கு வர்ணம் தீட்டுதல் மற்றும் கடைசி நேர மராமத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மீன்பிடித்தடை காரணமாக கடந்த 2 மாதங்களாக மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதனால், அசைவ பிரியர்கள் கோழிக் கறியை வாங்கிப் பயன்படுத்தினர். இதனால், ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கோழிக் கறியின் விலை அதிகபட்சமாக ரூ.320 வரை விலை அதிகரித்தது.

இந்நிலையில், மீனவர்கள் கடலுக்குச் செல்வதையடுத்து மீன்களின் வரத்து அதிகரிக்கும். இதனால், அடுத்த வாரம் முதல் மீன்களின் விலை குறையத் தொடங்கும். இதற்கிடையே, இந்த மீன்பிடித் தடைக் காலத்தை வரும் அக்டோபர் மாதத்துக்கு மாற்ற வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, அவர்கள் கூறுகையில், “கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் அங்கு பருவ மழை தொடங்கும் சமயத்தில் தான் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் இதற்கு மாறாக மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. எனவே, தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மீன்பிடித் தடைக்காலத்தை அமல்படுத்த வேண்டும். எங்களது கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x