Published : 12 Jun 2024 03:43 PM
Last Updated : 12 Jun 2024 03:43 PM
நெல்லை: "மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு என்ற பெயரில் கடிதம் பெறும் பிபிடிசி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமிழக அரசை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, கிருஷ்ணசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது: "திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் 8,373 ஏக்கர் பரப்பளவில் பிபிடிசி என்ற தனியார் தேயிலை நிறுவனம் இயங்கி வருகிறது. அந்நிறுவனத்தில் தற்போது ஏறக்குறைய 600க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஒப்பந்த மற்றும் நிரந்தர பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்நிறுவனத்தின் ஒப்பந்த காலம் வருகிற 2028ம் ஆண்டுடன் முடிவடைவதாகவும், நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை அந்நிறுவனம் சில பணப் பலன்களை அறிவித்து, விருப்ப ஓய்வு என்ற பெயரில் மறைமுகமாக கட்டாயப்படுத்தி, அச்சுறுத்தி விருப்ப ஓய்வு படிவத்தில் கையெழுத்து பெற முயற்சி நடைபெற்று வருகிறது. இதில், தாங்கள் தலையிட்டு தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 08.06.2024 அன்று புதிய தமிழகம் கட்சியின் வழக்கறிஞர் குழு, மாஞ்சோலை மலை பகுதிக்குச் சென்று மாஞ்சோலை, நாலு முக்கு, காக்காச்சி, ஊத்து ஆகிய நான்கு எஸ்டேட் பகுதி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை நேரடியாகச் சந்தித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், பிபிடிசி நிறுவன ஒப்பந்த காலம் 2028ம் ஆண்டு முடிவடைவதாகக் கூறி, வருகிற ஜூன் 14ம் தேதிக்குள் விருப்ப ஓய்வு கடிதத்தில் அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் கையெழுத்திட வேண்டும்; இல்லையெனில் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு மின்சாரம், குடிநீர், போக்குவரத்து போன்ற அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் துண்டிக்கப்படும் எனத் தொழிலாளர்களை பிபிடிசி நிர்வாகம் மிரட்டியுள்ளது. தற்போது வரை அச்சுறுத்திக் கட்டாயப்படுத்தி ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களிடம் நிர்வாகத்தால் விருப்ப ஓய்வு கடிதத்தில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.
கையெழுத்திட்டவர்கள் அடுத்த 45 நாட்களுக்குள்ளாக தங்களது வாழ்விடங்களை காலி செய்து மலைப்பகுதியை விட்டு வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும் எனவும்; கையெழுத்திட மறுக்கும் மீதமுள்ள தொழிலாளர்களை அவர்கள் வேலை செய்யும் இடங்களுக்கே சென்று தனித்தனியே அழைத்துத் தனிமைப்படுத்தி தினந்தோறும் அழைத்து "இன்று கையெழுத்திருங்கள்; இல்லையென்றால் உங்களை வேறு காட்டிற்கு மாற்றி விடுவோம்" என மிரட்டி அச்சுறுத்தி இருக்கின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது; இது அப்பட்டமான மனித உரிமை மீறலும், தொழிலாளர் சட்ட விரோத செயலும் ஆகும்.
அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்திலும் மன உளைச்சலிலும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. பிபிடிசி நிர்வாகத்தின் ஒப்பந்த காலம் 2028ம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி கடிதம் பெற்று, வேலை இழக்கச் செய்து தொழிலாளர்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தும் அதிகாரம் பிபிடிசி நிர்வாகத்திற்கு கிடையாது.
1998ம் ஆண்டுகளில் இதுபோன்று தொடர்ந்து பிபிடிசி நிர்வாகத்தால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட மனித உரிமை மீறல்களைக் கண்டித்துத் தான் எண்ணற்ற பெரும் தன்னெழுச்சி போராட்டங்கள் நடைபெற்றன. அதேபோல தற்பொழுது மீண்டும் சில பணப் பலன்களைக் காட்டி மக்களை அச்சுறுத்துவதும் கொடுமைப்படுத்துவதும் மிரட்டுவதும் ஏற்புடையதல்ல. அங்குள்ள தோட்டத் தொழிலாளர்கள் நான்கைந்து தலைமுறைகளாக மாஞ்சோலையில் குடியேறி பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களில் பலருக்கு தங்களது சொந்த ஊர் எதுவென்று கூட தெரியாது; தளப் பகுதிக்கு வந்தால் வசிக்க ஒரு சதுர அடி நிலம் கூட சொந்தமாக கிடையாது; தேயிலை தொழிலைத் தவிர வேறு எந்த தொழிலும் அவர்களுக்கு தெரியாது. இந்நிலையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் 600க்கும் மேற்பட்ட குடும்பங்களை அவர்களின் வாழ்விடங்களை முற்றாக அழித்து, வெளியேற்ற முயற்சிப்பது எவ்விதத்திலும் நியாயம் அல்ல.
ஆகையால், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை அச்சுறுத்தி, மறைமுகமாக மிரட்டி, கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு என்ற பெயரில் கடிதம் பெறுவது சட்ட விரோதமான செயல். எனவே, பிபிடிசி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் பெற்ற விருப்ப ஓய்வு கடிதங்களை ரத்து செய்ய வேண்டும். இந்திய அரசியல் சாசனத்தின் படி மின்சாரம், குடிநீர் ஆகியவை ஒவ்வொரு குடிமக்களின் அடிப்படை உரிமைகள் ஆகும்; அதைப் பறிப்பது மனித உரிமை மீறலாகும்.
எனவே அச்சத்தில் உள்ள அம்மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி அவர்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பிபிடிசி நிர்வாகத்தால் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மாஞ்சோலை பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட அனுமதிக்கக் கூடாது. தேயிலைத் தோட்டங்களைத் தமிழக அரசு மீட்டு, தமிழக தேயிலைத் தோட்ட கழகமே (TANTEA) எடுத்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் தற்போதைய வாழ்விடங்களிலேயே அம்மக்களின் வாழ்வுரிமையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.
தமிழக அரசின் வனப்பகுதிக்குச் சொந்தமான 8,373 ஏக்கர் பரப்பளவு நிலத்தைப் போலி பத்திரம் தயார் செய்து 2015ம் ஆண்டு சென்னை ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் ரூ.50 கோடிக்கு அடமானம் வைத்தது இப்பொழுது அம்பலமாகியுள்ளது. குத்தகை முடியும் தருவாயில் அரசை ஏமாற்றவும்; அந்த நிலத்திற்கு அவர்களே சொந்தம் கொண்டாடவும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். எனவே பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ள அந்நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்."
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT