Published : 12 Jun 2024 03:07 PM
Last Updated : 12 Jun 2024 03:07 PM
சென்னை: தொழில் நுட்ப கோளாறு காரணமாக பால் அட்டை பெறுவதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், பிரச்னையை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் சு.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணைய நிறுவனம் சமன்படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால், டிலைட் பால் மற்றும் நிறை கொழுப்பு பால் ஆகிய பால் வகைகளை பால் அட்டை மூலம் நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. அவ்வகையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 4.5 லட்சம் லிட்டர் பால், பால் அட்டை மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நுகர்வோர்களுக்கு தேவையான பால் வகைகளை சலுகை விலையில் பெற விரும்புவோர் நேரடியாக வட்டார அலுவலகங்களுக்கு சென்றும் மற்றும் www.aavin.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்தும் ஆவின் பால் பெற்று வருகின்றனர். எவ்வித சிரமமுமின்றி தங்கள் இல்லங்களிலிருந்தே இணையதளம் மூலமாக பால் அட்டையை பெறும் வசதியை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். மேலும் இணைதளம் மூலமாக பால் அட்டை விற்பனை மாதந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் ஜுன் மாதத்தில் ஆவின் நிறுவனம் பண பரிவர்த்தனைகளை எளிதாக்கும் நோக்கில் மேம்படுத்தப்பட்ட கட்டண நுழைவாயில் (Payment Gateway) முறையினை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில நுகர்வோர்களுக்கு இணையதளம் வாயிலாக பால் அட்டை பெறுவதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சரிசெய்து அனைத்து நுகர்வோர்களுக்கும் இணையதளம் வாயிலாக பால் அட்டை பெற ஆவின் நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT