Published : 12 Jun 2024 02:10 PM
Last Updated : 12 Jun 2024 02:10 PM
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 20 - 29ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தற்போது அறிவித்துள்ளார்.
மேலும் சட்டசபை நிகழ்ச்சி நிரல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஜூன் 20ம் தேதி தொடக்க நாளன்று விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. 21ம் தேதி முதல் 29ம் தேதி வரை துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இடையில் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சட்டப்பேரவை கூட்டத்துக்கு விடுமுறை.
முதல் நாளே நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. தொடர்ந்து இயற்கை வளங்கள் துறை, தொழிலாளர் நலன், வீட்டு வசதி, மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை என விவாதங்கள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜூன் 24-ம் தேதி தொடங்குவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, ஜூன் 24-ம் தேதிக்கு பதிலாக நான்கு நாட்களுக்கு முன்னதாக ஜூன் 20-ம் தேதியே பேரவைக் கூட்டத் தொடர் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT